பிரஷர் கொடுக்கும் அமலாக்கத்துறை.. இன்னும் ஆக்ஷன் எடுக்கல.. டிஜிபிக்கு மீண்டும் புகார் கடிதம்!
சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி சோதனை நடத்தியது தொடர்பாக மீண்டும் டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
தமிழ்நாட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சிறையில் உள்ளார். அமலாக்கத்துறையை பாஜக அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுவதாக, திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத் துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.
அங்கு அங்கித் திவாரியின் அறை சாவியை அமலாக்கத் துறையினர் தர மறுத்ததால் பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மீது தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அமலாக்கத் துறை உதவி இயக்குனர் பிரிஜிஸ் பினிவால் புகார் அளித்தார்.
மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களை வைத்து சோதனை நடத்தினர். சோதனையின் போது அமலாக்கத் துறை விசாரித்து வரும் முக்கியமான வழக்குகளின் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். 35 பேர் சாதாரண உடையில் வந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அமலாக்கத் துறை அலுவலகத்தில் நுழைந்தனர் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு வந்தவர்கள் யாரும் அடையாள அட்டையை காட்டவில்லை, பேட்ஜும் அணிந்திருக்கவில்லை. அமலாக்கத் துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த 35 பேரும் மறுநாள் காலை 7.30 மணி வரை அங்கு இருந்தனர். அங்கித் திவாரி அறையில் நுழைந்து குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட கோப்பு மட்டுமின்றி, தேவையற்ற மற்ற வழக்குகளின் ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனை சட்ட விரோதமானது என்றும், உரிய அனுமதி இன்றியும், அடையாள அட்டை இல்லாமல் நுழைந்து சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமலாக்கத் துறையினர் தமிழக டிஜிபிக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அனுப்பிய புகார் கடிதத்தில் தெரிவித்தது போன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று டிஜிபிக்கு நினைவூட்டல் கடிதமாக இந்த புகாரை மீண்டும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications