இரட்டை இலை வழக்கு- மாற்றி பேசிய சுகேஷ்.. டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னை: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறை போலீஸார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தது.
இதையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என இரு அணிகளும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சசிகலா தரப்பு
சசிகலா அணி தரப்பில் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் அணியினர் முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ரூ 50 கோடி லஞ்சம்
இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் ரூ 50 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதில் முன்பணமாக ரூ 2 கோடியை தினகரன் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது. இதில் "சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்தது கூட இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இரட்டை இலை சின்னம்
இந்த நிலையில் பல்வேறு பணமோசடி வழக்குகளில் சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பண மோசடி தொடர்பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 15 ஆம் தேதி வரை காவலில் எடுத்துள்ள அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

10 கோடி ரூபாய்
இந்த நிலையில் முன்பு தனக்கு டிடிவி தினகரன் ரூ 2 கோடி லஞ்சம் முன் பணம் கொடுத்ததாக கூறியிருந்த சுகேஷ் சந்திரசேகர் தற்போது திடீரென 10 கோடி ரூபாய் கொடுத்ததாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முக்கிய சாட்சியான கோபிநாத் கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இரட்டை இலை வழக்கில் விசாரணை நடத்துவதற்காக கடந்த 8 ஆம் தேதி டிடிவி தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

11 மணி நேரம் விசாரணை
இந்த நிலையில் அன்றைய தினம் டிடிவி தினகரன் ஆஜராகாத நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு சென்றார். நேற்று மதியம் 12 மணிக்கு விசாரணைக்காக சென்ற டிடிவி தினகரனிடம் நேற்று இரவு 11 மணிவரை விசாரணை நடத்தினர். இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி. இந்த வழக்கில் அரசியல் பின்புலம் இருக்கிறது. அவர்கள் யார் என தெரியவில்லை. சுகேஷ் யார் தூண்டுதலின் பேரில் இப்படி செய்கிறார் என தெரியவில்லை. சுகேஷின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். இந்த வழக்கு தொடர்பாக எப்போது அழைத்தாலும் ஆஜராவேன் என்றார்.












Click it and Unblock the Notifications