எண்ணூர் கேஸ் லீக்.. சுனாமி போல பதற்றம்.. உயிரை கையில் பிடித்து ஓடிய மக்கள்.. உடனே அறிக்கை தர உத்தரவு
சென்னை: எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிபுணர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழு ஒன்று அமைத்துள்ளதாக கூறியுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம்,
இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வட சென்னை மக்களுக்கு கடந்த பல ஆண்டு காலமாகவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளால் காற்றில் கலந்து வரும் நச்சுப்புகை, நிலத்தடி நீர் பாதிப்பு என சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் கச்சா எண்ணெய் கலந்த சோகம் மறைவதற்குள் அமோனியா வாயு கசிவு உயிர் பயத்தை ஏற்படுத்தி விட்டது. செவ்வாய்க்கிழமை இரவு உறங்கிக்கொண்டிருந்த எண்ணூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறலும் நெஞ்செரிச்சல், கண் எரிச்சலும் ஏற்பட்டது.

உயிர் தப்பினால் போதும் என்று பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சுனாமி வந்தது போல பதற்றத்தில் உயிரை காக்க ஓடியதாக அச்சத்துடன் விவரித்துள்ளார் ஒரு பெண். எங்களோடு போகட்டும் அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று கூறும் இந்த பகுதி மக்கள், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சர்ச்சைக்கு உள்ளான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் 1960-ம் ஆண்டு ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சென்னை எண்ணூர் உற்பத்தி அலகு, 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமம் மற்றும் EID பாரி நிறுவனம் இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த நிறுவனத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பயிர்களுக்கு தேவையான சிறப்பு ஊட்டச்சத்து பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் 16 உற்பத்தி அலகுகளைக் கொண்ட கோரமண்டல் நிறுவனம், க்ரோமர், கோதாவரி, பரம்ஃபோஸ், பாரி கோல்ட், பாரி சூப்பர் ஆகிய பெயர்களில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கிறது.
மேலும் 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் ஆலோசனை, மண் பரிசோதனை, பண்ணை இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட விவசாய சேவைகளையும் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கி வருகிறது. அமோனியா 100 ஆண்டுகளுக்கு மேல் உலகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகில் உற்பத்தி செய்யப்படும் 83 சதவீத அமோனியா, உரத் தயாரிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஆண்டிற்கு 110 மில்லியன் டன் அமோனியா உரமாக பயன்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அமோனியாவில் 80 சதவீதம், ரசாயன உரத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அமோனியா வாயு நச்சுத்தன்மை மிகுந்தது என்பதால், அது காற்றில் கலக்கும்போது சுமார் 5 மணி நேரம் வரை அதன் தாக்கம் நீடிக்கும். குறைந்த அளவு அமோனியா வாயு சுவாசிக்கும்போது கண்ணெரிச்சல், மயக்கம் போன்ற பாதிப்புகளும், அதிகளவு சுவாசித்தால் மூச்சுத் திணறலும் ஏற்படும். அமோனியா வாயுவை வெகுநேரம் சுவாசிக்கும்போது, நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பைப் லைனில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில், கோரமண்டல் நிறுவன தொழிற்சாலையில் இருந்து கடலுக்கு செல்லும் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பே அம்மோனியா வாயு கசிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. தகவலறிந்ததும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடைப்பை சரிசெய்யும் பணியை விரைந்து மேற்கொண்டதாகவும், அதன் பயனாக 20 நிமிடங்களில் வாயுக்கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னை, எண்ணூர் பகுதியில், நேற்று நள்ளிரவு 11-45 மணியளவில், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் அமோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் அமோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் அமைந்துள்ள சிறுதுறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்தத் தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11-45 மணியளவில் இந்தத் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன், தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 42 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களது உடல் நலன் குறித்து விசாரித்து, உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கிட உத்தரவிட்டார்.
தற்போது குழாயில் அமோனியா கசிவு இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும், தனது விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அமோனியாவை வெளியே எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களை முற்றிலுமாக சரிசெய்து, உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே, அமோனியா கப்பலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்துக்கு தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications