EPFO உச்ச வரம்பு 15,000 க்கு பதில் இனி 25000 ரூபாய்.. மக்கள் அறிய வேண்டிய சூப்பர் முன்னெடுப்பு
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாய வரம்பிற்குள் வருவதற்கான மாத ஊதிய உச்ச வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தினை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மத்திய அரசிடம் முன் வைத்தது. இந்த திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய EPFO வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், இது தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையை விரிவுபடுத்தும் என்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

EPFO ஊதிய வரம்பு 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டு காலத்தில் மாற்றமின்றி இருந்தது. ஆனால் இது கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டது. அதாவது 15000 சம்பளம் வாங்குபவர்களுக்கு பிஎப் கட்டாயம் ஆக்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஆப்சனாகவே இருந்தது. தற்போது மத்திய அரசு உச்ச வரம்பை 12 வருட காலத்தில் மீண்டும் மாற்றியமைத்துள்ளது. இப்போது ஊதிய உயர்வு, வருமான அதிகரிப்பு மற்றும் முறைசார் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கைக ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே புதிதாக EPFO ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
EPFO-விற்கான புதிய ஊதிய உச்ச வரம்பு: மக்கள் அறிய வேண்டியவை
தற்போதைய வரம்பின்படி, மாதத்திற்கு ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் ஊழியர்கள் தானாகவே EPF கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படுவதில்லை. இதன் காரணமாக, மாத சம்பளம் வாங்கும் பலர் கட்டாய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காப்பீட்டுத் திட்டங்களின் வரம்பிற்கு வெளியே இருக்கிறார்கள். வேலை இழந்தால் அல்லது எதிர்பாராத சூழலின் போது கைகொடுக்க எந்த நிதி ஆதரவும் அவர்களுக்கு இருப்பது இல்லை..
ஆனால் இந்த வரம்பை ரூ.25,000-ஆக உயர்த்துவதன் மூலம், ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் இனி சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள். எனவே இனி இந்த உச்ச வரம்பு உயர்ந்ததன் காரணமாக, பல ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு உயரும். அவர்களுக்கும ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும்.
ஊழியர் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீட்டுப் பாதுகாப்பு ஆகியகை கிடைக்கும். பெ மேலும், இது சட்டப்பூர்வமாக ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களிடம் பிடிக்கும் அதே தொகையை பங்களிப்பாக இனி செலுத்த வேண்டியது வரும். மேலும் ஓய்வூதியத்திற்குரிய ஊதியக் கட்டமைப்பை தற்போதைய ஊதிய நிலைகளுக்கு நெருக்கமாகக் கொண்டு போய் நிறுத்தும்.
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கடைசி திருத்தத்திற்குப் பிறகு, ஊதியம் மற்றும் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதுடன், முறைசார் வேலைவாய்ப்பும் விரிவடைந்திருக்கிறது. பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு பணித் துறைகளில் குறைந்தபட்ச ஊதியமும் தற்போதுள்ள ரூ.15,000 என்ற வரம்பை நெருங்கிவிட்டன. எனவே, ஊதிய வரம்பை ரூ. 25,000-ஆக உயர்த்துவது, இம்மாற்றங்களுக்கு ஏற்ப EPFO-வின் ஊதிய வரம்பைப் புதுப்பிப்பதோடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பெரிய பகுதியை முறைசார் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை முறைப்படுத்த உதவும் என்று மத்திய அரசு நம்புகிறது. மேலும் ஊழியர்களை தக்ககவைக்கவும், நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இந்த திட்டம் முதலாளிகளைப் பொறுத்தவரை வேலையாட்கள் கம்பெனியை விட்டு திடீரென விலக மாட்டார்கள். வேலைசெய்யும் கம்பெனியிலேயே தொடர்ந்து வேலை செய்வார்கள். ஊழியர்களை தக்க வைக்க இந்த திட்டம் அவர்களுக்கு உதவும். ஒரு நல்ல பணியாளர் கட்டமைப்பை நிறுவனங்கள் உருவாக்க பிஎப் வசதி அவசியம் என்று நிறுவனங்களும் உணர்ந்துள்ளன. எனவே அவர்களுமே இதில் இனி ஆர்வம் காட்டுவார்கள்.
கடந்த ஜூன் 16 அன்று நடைபெற்ற கூட்டத்தில் செலவின நிதிக் குழுவின் பரிந்துரை பெறப்பட்டது. இந்த திட்டம் காரணமாக அரசின் ஆண்டுச் செலவு சுமார் ரூ. 11,339 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ரூ. 10,250 கோடி செலவாகிறது. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 56,696 கோடியாக இருக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.
சமீபத்திய EPFO தரவுகளின்படி, சுமார் 7.68 லட்சம் நிறுவனங்களில் சுமார் 7.98 கோடி உறுப்பினர்கள் பிஎப் சந்தாதாரர்களாக உள்ளனர். அத்துடன் EPS திட்டப்படி, சுமார் 82 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியப் பலன்களை பெறுகிறார்கள். அத்துடன் காப்பீடும் பெற்று வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
