இந்துத்துவாவை ஏற்றவர் எடப்பாடி.. மூவரை ஒதுக்கும் பாஜக! அண்ணாமலையை எதிர்க்கனும் -தனியரசு சொன்ன காரணம்
எடப்பாடி அணியில் 99% இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டவர்கள் என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி அணியில் உள்ள 99 சதவீதம் பேர் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்துவ கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனியரசு தெரிவித்து இருக்கிறார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை பாஜக ஒதுக்குவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர், "அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையாடா என்ற ஒரு பாடலுக்காக எத்தனைபேர் மக்கள் அதை பார்த்திருப்பார்கள்.
திராவிடம் என்ற வார்த்தையை உலகில் எந்த அரசியல் கட்சியும் கொண்டு செல்லாதபோது, கருப்பு வெள்ளை நிறத்தில் எம்ஜிஆர் அந்த வரிகளை பாடி திரையரங்கில் கொண்டு செல்வார். அந்த அளவுக்கு திராவிடத்தால் பற்று கொண்ட அந்த தலைவரின் சின்னம் இரட்டை இலை. அதிமுக.

ஏன் மோடியை மதித்தோம்?
உழைத்த பணத்தை எல்லாம் வாரி கொடுத்த மகத்தான தலைவனுடைய கட்சி அதிமுக. நட்புக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர்போனவர்கள் தமிழர்கள். அதனால் நாம் அண்ணாமலையை மதித்தோம். மோடியை மதித்தோம். அமித்ஷாவை மதிக்கிறோம். அதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அவர்கள் நம்மை வீழ்த்த நினைத்தால் அதில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. நான் இன்னும் தெளிவாக சொல்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ ஏற்றவர் எடப்பாடி
எடப்பாடி முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்துவ கருத்தை ஏற்றுக் கொண்டவர். எடப்பாடி மட்டுமல்ல, அவரது அணியில் உள்ள 99 சதவீதம் பேர் பாஜக ஆர்.எஸ்.எஸ். கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள். சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி போன்று 2, 3 பேரை தவிர தங்கமணி, வேலுமணி போன்ற பலர் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.

ஓபிஎஸ் திராவிட பற்றாளர்
அவர்களில் பெரும்பாலான நிர்வாகிகள் எல்லோரும் மோடி வாழ்க, அமித்ஷா வாழ்க, அண்ணாமலை வாழ்க, எடப்பாடி வாழ்க என்று ஒரு அணியாக இருக்கிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அப்படி செல்ல மாட்டார் என்பது எனக்கு தெரியும். அவர் திராவிட கருத்தியலில் மிகுந்த பற்று உறுதி கொண்ட நபர். அவர் இறை பக்தி கொண்ட நபராக இருப்பார்.

அண்ணாமலை புறக்கணித்தார்
இந்துத்துவத்தை ஒருபோதும் ஓபிஎஸ் ஏற்கமாட்டார். சசிகலா ஏற்க மாட்டார். டிடிவி தினகரன் ஏற்க மாட்டார். எனவே திட்டமிட்டே தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கின்ற முக்குத்தோர் சமூகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆகப்பெரும் தியாகங்களை செய்த மகத்தான மூன்று ஆளுமைகளை அண்ணாமலை திட்டமிட்டு புறக்கணித்து எடப்பாடியை வலிமைப்படுத்த நினைக்கிறார்.

அண்ணாமலையை விமர்சிக்க வேண்டும்
நாம் அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்க வேண்டும். இன்று சிவகங்கையில் போட்ட தீர்மானத்தை போலவே தமிழ்நாடு முழுவதும் போட வேண்டும். நான் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரிடம் தெளிவாக வெளிப்படையாகவே முன்கூட்டியே சொல்லிவிட்டேன். அதிமுகவின் வலிமையான தலைமையை கைப்பற்றுவதை தவிர்த்து நம்மை வெளியேற்றுவதில் அது குறியாக உள்ளது.

சசிகலாவே அதிமுகவை இயக்கினார்
ஏனெனில் அதிமுகவை இயக்கியது சசிகலா என்பது பாஜகவுக்கு தெரியும். அதில் டிடிவி தினகரனின் பங்களிப்பு தெரியும். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களிப்பு தெரியும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியிலோ ஆட்சியிலோ பெரிய பங்காளி கிடையாது. அவர் ஆயிரத்தில், லட்சத்தில் ஒரு நபர். இந்த 3 பேர் வந்திருந்தால் இந்த கட்சி வலிமை பெற்று இருக்கும்.

மூவரை ஒதுக்கும் பாஜக
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைபோல சக்தி வாய்ந்த தலைவர் அதிமுகவுக்கு கிடைத்துவிடுவார் என்பதால்தான் அண்ணாமலை, பாஜக, இந்துத்துவ அமைப்புகள் இந்த 3 ஆளுமைகளை படிப்படியாக வெளியேற்றுகிறது. தமிழ்நாட்டு மக்கள், அதிமுகவினர் நம்மை ஆதரிப்பார்கள் என்று நான் சொல்கிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications