நாளுக்கு நாள் வீக் ஆகும் என்டிஏ.. அமித்ஷா டேபிளில் ரிப்போர்ட்! அதிகாலையில் டெல்லிக்கு பறந்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அதனை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அதிமுகவில் மோதல்கள் வலுத்து வருவதோடு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் டிடிவி ஓபிஎஸ் குறித்து பேசுவதற்காகவும், அதிமுக ஒரு உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் அந்த கூட்டணி உடைந்தது. இருந்தபோதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேச்சையாக ராமநாதபுரம் மற்றும் தேனியில் போட்டியிட்டனர்.

அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடமும் பிடித்தனர். இதனால் அவர்கள் மீதான கோபம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகரித்தது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உருவானது.

EPS Delhi Visit

அதிமுக

அந்த கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைமை தீவிரமாகச் செயல்பட்ட நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரைச் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்தார். தொடர்ந்து கூட்டணியும் உறுதி செய்யப்பட்ட நிலையில் தங்களை புறக்கணிப்பதாகக் கூறி ஓபிஎஸ், டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் வரவேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

செங்கோட்டையன்

இதை அடுத்து அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி பயணம் மேற்கொண்ட அவர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். நேபாளத்தில் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பி பரபரப்பாக இருந்த நிலையில் அதே நேரத்தில் செங்கோட்டையனை அவர் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி டெல்லி பயணம்

தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு இருக்கும் அவர் இன்று தருமபுரி பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்துவிட்டு டெல்லி செல்லும் அளவுக்கு அவசரப் பயணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது. அதிகாலையிலேயே சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தபின் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசலாம் என சொல்லப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். ஆனால் அந்தக் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பதால் அவரோடு ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் டெல்லி தலைமையின் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, "நான் போய் டெல்லிக்குச் சென்று சந்தித்தால் அவதூறாகப் பேசுவார்கள். எனவே நேரம் வரும்போது வருவேன்" என கூறி இருந்தாராம். இந்த நிலையில்தான் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

பாஜக - அதிமுக

இதை அடுத்து டெல்லி பயணத்தை தட்டிக் கழிக்க முடியாமல் தருமபுரி சுற்றுப்பயணத்தை தள்ளி வைத்துவிட்டு டெல்லி சென்றிருக்கிறார். இன்று சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் அவர் தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, திமுக கூட்டணியின் நிலைமை, புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, அதிமுக உட்கட்சி விவகாரம் ஆகியவை குறித்துப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+