வாயை மூடிப் பேசவும்..மா.செ.க்களுக்கு வாய்ப்பூட்டு போட்ட எடப்பாடி பழனிசாமி! கூட்டணி குறித்து கப்சிப்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் வாக்காளர் திருத்தப் பணிகளில் அதிமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தமிழக முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தற்போது திரும்ப பெறப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் திருத்த பணிகளில் விழிப்புரன் செயல்பட வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி ஆலோசனை
இதை அடுத்து பூத் லெவல் அலுவலர்களுடன் சேர்ந்து திமுகவினரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இது மட்டுமல்லாமல் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
எஸ்.ஐ.ஆர் பட்டியல்
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி," தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, கட்சியின் சார்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக பொதுக்குழு
அதிமுக சார்பில் பூத் (பாகம்) அமைப்பதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டு, அப்பணி நிறைவடைந்து உள்ளது. மாவட்ட செயலாளர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை கண்காணித்து, மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இணைந்து முழுமையாக செய்து முடித்து, அதன் விவரங்களை கட்சி தலைமைக்கு தெரிவிகக் வேண்டும். டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக உத்தரவு
அந்த பொதுக் குழு கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சிறப்பாக பணியாற்ற வேண்டும். அந்தத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர் மக்கள் நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளை சரி செய்ய வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் குறித்து பொதுவெளிகளில் யாரும் பேசக்கூடாது எனவும், கூட்டணி குறித்தும் கூட்டணி கட்சிகள் குறித்தும், மூத்த தலைவர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி தருவதோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பேசக்கூடாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications