அதிமுக நிலைப்பாடு பற்றி வாயே திறக்காதீங்க.. நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு விதித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: "அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து எந்த கருத்துகளையும், கட்சித் தலைமையின் அனுமதியின்றி தொலைக்காட்சி, பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்துள்ளார்.
"கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை" என அதிமுக ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை இன்று பேசியது சர்ச்சையான நிலையில் நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எடப்பாடி விதித்த கட்டுப்பாடு
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்!
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும். ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இள்ளபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சி?
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசனை நடத்திய பிறகு வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார்.
தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். அமித் ஷா இவ்வாறு தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி இல்லை என உறுதியாகத் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தம்பிதுரை பேசியது
எனினும் கூட்டணி ஆட்சி தொடர்பாக விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை, "பாஜகவோடு அதிமுக திடீரென கூட்டணி அமைக்கவில்லை. சென்ற செயற்குழு, பொதுக்குழுவில் அவருக்கு முழு அதிகாரம் தரப்பட்டது. அந்த ஜனநாயக அடிப்படையில்தான் இப்போது அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கிறார்.
1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ராஜாஜி காலம் முதல் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்தது கிடையாது. தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும் ராஜாஜியும், கருணாநிதியும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. 2006ல் ஒரு நிலைமை ஏற்பட்டது. திமுகவுக்கு 93 சீட்டுதான். பிரணாப் முகர்ஜி அப்போது இங்கு வந்தார். கூட்டணி ஆட்சி கேட்டார். கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. அதேநிலைதான், தற்போதும். 2026ல் எடப்பாடி பழனிசாமி தனித்தேதான் ஆட்சி அமைப்பாரே தவிர, கூட்டணி ஆட்சி கிடையாது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications