தூய்மைப் பணியாளர்கள் குண்டர்களா? நக்சலைட்டுகளா? நள்ளிரவில் அடாவடித்தனம்.. வெடித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டர்களா? சமூகவிரோதிகளா? நக்சலைட்டுகளா? என கேள்வி எழுப்பி உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு அடக்கு முறையை எந்த அரசும் ஏவியதில்லை என விமர்சித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 6, மண்டலம் 5 ஆகிய பகுதிகளில் தூய்மை பணிக்கான தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்
13 நாட்களாக அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களை திரைப்பட நடிகர்கள், பல்வேறு அமைப்புகள், அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூய்மை பணியாளர் போராட்டம்
இதனை அடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் ரிப்பன் மாளிகை முன்பு குவிக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கைது செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்திருக்கிறது. மேலும் கைதின் போது தூய்மை பணியாளர்களை போலீசார் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் கைது செய்ய தூய்மை பணியாளர்கள் என்ன குண்டர்களா? நக்சலைட்களா? என கேள்வி எழுப்பி உள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே.. ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை. யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
திமுக
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா? அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில் , எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
நள்ளிரவில் அடாவடி
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும், நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. தூய்மை பணியாளர்கள் 8க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
முக ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications