அமமுகவுக்கு 9 தொகுதிகளா? எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா எடுத்த முடிவு.. டிடிவி தினகரன் கொடுத்த பதில்!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். தொகுதி பங்கீடு அனைத்தும் சுமூகமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த டிடிவி தினகரன், அனைவரும் இணைந்து ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக மீண்டும் இணைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறிய டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின் எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசை அளிக்க வேண்டும் என்று விமர்சித்திருந்தார்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வதற்கு பதிலாக தூக்கில் தொங்கிவிடலாம் என்று டிடிவி தினகரன் பேசியது மிகப்பெரிய அளவில் டிரெண்டாகியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இடையிலான டெல்லி சந்திப்பு தமிழக அரசியலில் பல்வேறு முக்கிய திருப்பங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
டெல்லியிலேயே அமமுகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கான சமிக்ஞைகளை எடப்பாடி பழனிசாமி காட்டி இருந்தார். அதற்கேற்ப எதிரிகளையும், துரோகிகளையும் விட மக்கள் நலனே முக்கியம் என்று டிடிவி தினகரன் பேசி இருந்தார். டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தபின், டிடிவி தினகரன் மிகவும் அமைதியாகவே காணப்பட்டார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று, இன்று டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதனிடையே டிடிவி தினகரன் தரப்பில் அமித்ஷாவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அமித்ஷாவிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து டிடிவி தினகரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொகுதி பங்கீடு அனைத்தும் சுமூகமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் இணைந்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications