பியூஷ் கோயலை சந்தித்த டிடிவி தினகரன்.. கூட்டணி அமைத்தும் சந்திக்காத எடப்பாடி பழனிசாமி! பின்னணி என்ன?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துவிட்டு, உடனடியாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்று கூறி வந்த நிலையில், டிடிவி தினகரனை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மறுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி சென்னை மதுராந்தகம் அருகே நடக்கவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால் பொதுக்கூட்டம் மேடையில் கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையேற்ற அதிமுக - பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே பாமகவின் அன்புமணி தரப்புடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உறுதி செய்தார்.

சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்தார் அன்புமணி. அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை வெளியிட்ட உடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல் அமமுக நிர்வாகிகளும் இருந்தனர். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த எந்த நிர்வாகிகளும் இந்த சந்திப்பின் போது இருக்கவில்லை. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்று அமித்ஷா கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவில்லை. டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காமல் இருப்பது விவாதமாகி இருக்கிறது.
இதனால் பாஜகவின் வற்புறுத்தலின் பெயரிலேயே அமமுக கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் டிடிவி தினகரனுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்குமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றால், டிடிவி தினகரன் உடனான கூட்டணி அதிமுகவுக்கு பின்னடைவாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் அமமுகவின் ஆதரவு வாக்குகள் அதிமுக வேட்பாளர்களுக்கும், அதிமுக ஆதரவு வாக்குகள் அமமுகவுக்கும் செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே இந்தக் கூட்டணியால் வெல்ல முடியும். இதற்கு உயர்மட்ட அளவில் இணைந்து பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம். தலைவர்களே சந்திக்கவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து பணியாற்றுவதும் சிக்கலாகும் என்று கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications