ஈரோடு கிழக்கு முடிவு.. இது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி.. திருமாவளவன் சொன்ன பாய்ண்ட்!
ஈரோடு கிழக்கு வெற்றியை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியாக பார்க்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியை, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்க முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலையீடு அவசியம் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார். இதன்படி 6ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதன்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,116 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,778 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 2,964 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 431 வாக்குகளும் பெற்றுள்ளார். பிற கட்சியினர் 261 ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

திருமாவளவன் பேட்டி
இதன் மூலம் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற வியூகத்தை மு.க.ஸ்டாலின் வகுத்துள்ளார். பிறந்தநாள் பொதுக்கூட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் தொடக்க உரையாக அமைந்துள்ளது. இந்த கருத்தை விசிக வலியுறுத்தி வந்துள்ளது. எங்களுக்கு குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் மு.க.ஸ்டாலினின் உரை அமைந்துள்ளது.

அனைவரையும் ஒன்றிணைக்க பயணம்
அதுமட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் பயணம் செய்து பாஜக எதிர்ப்பு சக்திகளை மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும். அகில இந்திய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகள் அதிகம். அவர்களை ஓரணியில் திரட்ட வேண்டும் என்பதே விசிக வேண்டுகோள்.

கூட்டணிக்கான வெற்றி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். 2 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம். இப்போது மக்கள் அதே முடிவை அளித்திருக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி என்பதை விடவும், திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினின் தலையீடு
பின்னர் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவம் பற்றிய கேள்விக்கு, அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் தலையீடு தேவை என்று பரூக் அப்துல்லா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த தேர்தலின் போதே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தவர் மு.க.ஸ்டாலின் தான். தமிழ்நாட்டில் அமைந்தது போல் காங்கிரஸ் ஒற்றுமையாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அவருக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் துணையாக இருக்க வேண்டும் என்பதுதான் உள்ளடக்கம். இதனால் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications