சென்னை மாநகராட்சி டாப் மாணவி பூங்கோதை ஆனந்த கண்ணீர்.. எத்திராஜ் கல்லூரி தந்த இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதைக்கு சென்னையின் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றான எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் 100 சதவீதம் உதவித்தொகையுடன் படிப்பதற்கான வாய்ப்பு வழங்கி உள்ளது.
மாணவி பூங்கோதையை நேரில் அழைத்து பாராட்டியதுடன், உதவி அளிப்பதை உறுதி செய்த எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரன், சென்னையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் இது போன்று வாய்ப்பளித்தால் மாணவர்கள் நன்றாக படிக்க உந்துதலாக இருக்கும் என்றார்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் படித்த பூங்கோதை, பிளஸ் 2 தேர்வில் 578/600 மதிப்பெண் பெற்று மாநகராட்சி அளவில் முதல் மாணவியாக திகழ்ந்தவர். இவர் முதலிடம் பெற்றது மட்டுமின்றி, நுனி நாக்கில் ஆங்கிலத்தை சரளமாக பேசிய வீடியோ வெளியானது . இதை ஆச்சர்யத்துடன் பார்த்த பலர், மாணவி படித்து முன்றே உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மாணவி பூங்கோதையின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் ஆவார். பூங்கோதையின் தாய் வீட்டு வேலை செய்த வருகிறார்.. இவர்கள் கொடுங்கையூர் பகுதியில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். பூங்கோதைக்கு ஒரு அக்காள் இருக்கிறார். அவர் பி.பார்ம் படித்து வருகிறார். பூங்கோதைக்கு பி.காம் படித்துவிட்டு சிஏ படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று ஊடகங்களில் வெளிப்படுத்தினார்.
மாணவி பூங்கோதை இதுபற்றி கூறும் போது, " நான் மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் மாணவியாக தேர்வு ஆனதில் மகிழ்ச்சி. அப்படியே வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. என் பெற்றோர் கடைக்கு சென்றாலே விலை பட்டியலை பார்த்து பொருட்களை வாங்கலாமா வேண்டாமா என்ற இயலா நிலையை நான் மாற்றும் அளவுக்கு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும். வாழ்வில் அது போன்ற உயரத்தை அடைய வேண்டும்.
என்னுடைய அப்பா ஆட்டோ டிரைவராக இருந்தாலும் நான் படிப்பதற்கு தேவையான அனைத்து சூழல்களையும் செய்து கொடுத்தார். எனது வெற்றிக்கு பெற்றோர், என் சகோதரி, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் ஊக்கம் அளித்தார்கள் என்றார். இந்த கவலை மாணவி பூங்கோதை ஆங்கிலத்தில் சரளமாக பேசினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மாணவி பூங்கோதைக்கு எத்திராஜ் கல்லூரியில் இலவசமாக சீட் தர கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது,. இது குறித்து எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், மாணவியின் பேட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி. பூங்கோதையிடம் தற்போது பேசியிருக்கிறேன். அவர் பி.காம் படிக்க விரும்புகிறார். அந்த படிப்பை உதவித்தொகையுடன் வழங்குவதாக அவரிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
அறிவித்தபடியே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதைக்கு சென்னையின் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றான எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் 100 சதவீதம் உதவித்தொகையுடன் படிப்பதற்கான வாய்ப்பு வழங்கி உள்ளது. மாணவியை அழைத்த எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரன், 100 சதவீதம் உதவி தொகையுடன் பிகாம் படிப்பதற்கான ஆணையை வழங்கினார்.
இதை வாங்கிய பின்னர் மகிழ்ச்சி அடைந்த மாணவி பூங்கோதை அளித்த பேட்டியில், சென்னையில் டாப் கல்லூரில் படிக்க போகிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாய்ப்பு கொடுத்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. என் அப்பா பீஸ் கட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டாங்க.. அக்காவுக்குமே பீஸ் கட்ட கஷ்டப்பட்டாங்க.. இந்த தருணம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு (வார்த்தை பேசும் போதுவரவில்லை).. " என்றார்
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரன், சென்னையில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் இது போன்று வாய்ப்பளித்தால் மாணவர்கள் நன்றாக படிக்க உந்துதலாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications