அனுமதி இல்லாம இப்படி பண்ணக்கூடாது சார்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை தடுத்த போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நடந்து சென்று நிழற்குடை வழங்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முயன்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதால், தவெக நிர்வாகிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடியவர்களை விஜய் நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

இதன்பின் தவெக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் மாற்றுக் கட்சியில் உள்ள நிர்வாகிகளை தவெகவில் இணைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவின் ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
தவெக நிர்வாகிகள்
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியும், சிடி நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கட்டங்களாக மாவட்டச் செயலாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் மாவட்ட அளவிலான பணிகளை தொடங்கி இருக்கின்றனர்.
இன்னும் ஒரு மாதத்தில் நகரம், ஒன்றியம் மற்றும் வட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அனுமதி மறுத்த போலீஸ்
அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நடந்து சென்று நிழற்குடை வழங்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேரணியாக வந்தார். இதனை கவனித்த காவல்துறையினர் உடனடியாக சென்று புஸ்ஸி ஆனந்திடம், அனுமதி இல்லாமல் இப்படி செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியதோடு, போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் புறப்படுமாறு கூறினார்.
பின்னால் ஒலித்த கோஷம்
ஆனால் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி வியாபாரிகளுக்கு நிழற்குடையை வழங்கினார். அப்போது பின்னால் இருந்த தவெகவினர், 2026 முதலமைச்சர் தளபதி என்று கோஷம் எழுப்ப, சூழல் பரபரப்பானது. ஒரு கட்டத்தில் காவல்துறை அதிகாரியுடன் தவெகவினர் வாக்குவாதம் செய்ய, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications