தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. மாஜி அமைச்சர் நறுக்.. கவனிக்கும் பாஜக ?
தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பாஜகவிற்கு தர்மசங்கடத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது என்று கூறிய அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் எனவும் கூறியிருக்கிறார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற பேச்சுக்களும் அரசியல் வட்டாரத்தில் எழாமல் இல்லை. இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கேபி முனுசாமி கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்த அக்கட்சி தலைமை உத்தரவிட்டது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கந்தன்சாவடியில் அதிமுக கூட்டம் நடைபெற்றது.

மக்கள் விரோத ஆட்சியாக
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். கேபி முனுசாமி கூறியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால், தற்போது ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. தேர்தலில் போது என்ன சொன்னார்கள்? இப்போது என்ன செய்கிறார்கள்?

மாதத்திற்கு ஒருமுறைதான் மின் கட்டணம்
மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது. இப்படி கணக்கீடு செய்வதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ. 6 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் இப்போதும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் ஆயிரம் யூனிட்டுக்கு ரூ.6.20 கட்டணம் இருந்தது. ஆனால் இப்போது ரூ.11 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாதம் ரூ.4,500 கூடுதல் செலவாகிறது.

உண்மையான திராவிட மாடல்
பால் விலை உயர்த்தப்பட்டதையும் சேர்த்தால் மாதம் ரூ.6 ஆயிரம் மக்களுக்கு கூடுதல் செலவாகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள்.. தந்தார்களா? இப்படி ஏமாற்றிக்கொண்டு இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? உண்மையான திராவிட மாடல் அதிமுக ஆட்சிதான். தேர்தல் நேரத்திலும் தேசியக் கட்சிகளாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி" என்று கூறினார்.

கட்சிக்குள் இணைத்த எடப்பாடி
கடந்த சில தினங்களாக தமிழக பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் எடப்பாடி தனது அணியில் சேர்த்து வருவது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏனெனில், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டனர், கூட்டணி கட்சி தலைவரை தரகுறைவாக பேசிவிட்டனர் என்றெல்லாம் கருதாமல் இவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் இணைத்துக் கொண்டார்.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி
கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக இப்படி செய்து இருக்கக் கூடாது என்று பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டியும் தனது பங்கிற்கு அதிமுகவை சாடி இருந்தார். இந்த விவகாரம் ஒருபக்கம் சென்று இருக்க தற்போது தேசிய கட்சிகளாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுகவின் மூத்த தலைவரான கேபி முனுசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பாஜக வட்டாரத்திலும் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications