சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்.. பிபிசிஎல் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம்
சென்னை டூ மதுரை.. இனி பாதி செலவில் காரில் போகலாம்.. பிபிசிஎல் நிறுவனத்தின் அட்டகாசமான திட்டம்
சென்னை: மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் பயணிக்க புதிய முயற்சியை பிபிசிஎல் (BPCL) நிறுவனம் எடுத்துள்ளது.
பருவநிலை மாற்றமும், புவி வெப்ப மயமாதலும் தான் உலக நாடுகளுக்கு இப்போது இருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை காற்று மாசு மற்றும் புவி வெப்பயமதாலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதைக் குறைக்கத் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.

மின்சார கார்கள்
அதன் விளைவாக தற்போது பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. இப்போது வெளியாகும் மின்சார வாகனங்கள், ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியாக 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக உள்ளன. காரை சிட்டிக்குள் ஓட்டுபவர்களுக்கு இது சரியாக இருந்தாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வோர் எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொதுவாக மின்சார வாகனங்களை விட்டுத் தள்ளியே இருப்பார்கள்.

சென்னை-திருச்சி-மதுரை
இந்நிலையில், மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்களும் சார்ஜ் குறித்த அச்சமின்றி பயணிக்க பிபிசிஎல் (BPCL) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி சுமார் 900 கிமீ நீளமுள்ள தமிழ்நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்களை பிபிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்களில் (EV) எளிதாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் நெடுஞ்சாலை என்ற சிறப்பை சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலை பெற்றுள்ளது.

அச்சம் வேண்டாம்
இது தொடர்பாக பிபிசிஎல் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ரவி கூறுகையில், "சென்னை-திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 100 கிமீ-க்கு ஒரு சார்ஜ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கு சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இனி மின்சார வாகனங்களை வைத்திருப்பவர்கள் பயணிக்கத் தேவையில்லை. இது தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிக ட்ராஃபிக் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாதி செலவு
இது குறித்து பிபிசிஎல் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், "வழக்கமாக மின்சார வாகனங்கள் 30-40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். அதுவரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓய்வு மற்றும் சிற்றுண்டிக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கிலோவாட்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக இது பெட்ரோல் காரை இயக்குவதற்கு ஆகும் செலவில் பாதி தான் செலவு ஆகும்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய திட்டம்
தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் சுமார் 7000 பங்குகளில் EV சார்ஜிங் வசதியை ஏற்படுத்தவும் பிபிசிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இவற்றை மக்களிடையே பிரபலப்படுத்த முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையையும் பிபிசிஎல் நடத்தி வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தென்னிந்தியாவில் மற்றொரு நெடுஞ்சாலை முழுக்க இதேபோல சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் இறுதிக்குள், இந்தியா முழுவதும் 300-400 சார்ஜிங் நிலையங்களை உருவாக்கவும் பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications