அதிமுக -பாஜக கூட்டணியில் முற்றும் மோதல்; முறுக்கிக் கொள்ளும் நிர்வாகிகள்! சைலண்ட் மோடில் தலைவர்கள்!
சென்னை: அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொண்டாலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக முட்டல் மோதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணி தொடர்வதை சைலண்ட் மோடில் உணர்த்தினாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் மனமுவந்து தேர்தல் பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே. அதிமுக -பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது எப்போது, எதனால் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கடந்த ஜூன் 12ஆம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஊழலில் நம்பர் 1 மாநிலம் என்று தமிழ்நாட்டை கூறுவேன் என்றும் முன்னாள் முதல்வர்கள் கூட ஊழலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கூறி அதிமுகவினரை சூடாக்கினார். ஜெயலலிதாவை தான் அண்ணாமலை இப்படி சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கடும் டென்ஷனான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகள் பலரும் பாஜகவின் உறவும் வேண்டாம், ஒட்டும் வேண்டாம் என அறிவியுங்கள் என எடப்பாடி பழனிசாமியை நெருக்கினர். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை மீது பலரும் அனல் கக்கினர். வழக்கம் போல் மாஜி அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகிகளை சமாதானம் செய்து எடப்பாடி பழனிசாமியையும் ஆஃப் செய்தனர்.
ஆனால் அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சும்மா இருக்குமா தமிழக பாஜக, கரு.நாகராஜனை களத்தில் இறக்கி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோருக்கு எதிராக ஆவேசமாக பேச வைத்தது.
இதனால் அப்போதே அதிமுக -பாஜக கூட்டணி முறிந்துவிடும் எனப் பேசப்பட்டது. ஆனால் பாஜக டெல்லி தலைமை அண்ணாமலையின் நடவடிக்கைகளை ரசிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை கூல் செய்யும் விதமாக டெல்லி மேலிடம் நடந்துகொண்டது. இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எடப்பாடி பழனிசாமிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவரை மட்டுமே பாஜக தேசிய தலைமையால் கூல் செய்ய முடிந்ததே தவிர அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கூல் செய்ய முடியவில்லை.
அம்மாவை பற்றியே தவறாக பேசும் போது அண்ணாமலை நமக்கெதற்கு என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதனால் தான் அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவுக்கு கூட எடப்பாடி பழனிசாமி செல்லாமல் சம்பிரதாயத்துக்கு உதயகுமாரை அனுப்பி வைத்தார். அதிமுகவுடனான கூட்டணியில் மேலும் விரிசலை விரும்பாத பாஜக தேசியத் தலைமை, என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜ மரியாதை அளித்தது.
பழசை மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அதிமுக இருந்து வந்த நிலையில், மீண்டும் அண்ணா பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி அதிமுக நிர்வாகிகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடினார் அண்ணா என்கிற வகையில் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டது.
கடந்த முறையை காட்டிலும் அண்ணாமலைக்கு அதிமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அண்ணாமலையாவது, உண்ணாமலையாவது, அண்ணாவை பற்றி யார் அவதூறாக பேசினாலும் நாக்கு அழுகிவிடும் என செல்லூர் ராஜூவும், மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என சி.வி.சண்முகமும் அட்டாக் செய்துள்ளனர். அதேபோல் ஜெயக்குமார் தனது பங்குக்கு அண்ணாமலையை வெளுத்து வாங்குகிறார்.
ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளும் இப்படி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி இணைந்து ஓட்டுக் கேட்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதிமுக தலைமையும், பாஜக தேசியத் தலைமையும் கூட்டணியை தொடந்தாலும் கூட இரண்டு கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் மனமுவந்து செயல்படுவார்களா என்பது சந்தேகமே. வேண்டாத வெறுப்பாக செய்யும் எந்தக் காரியமும் கரைசேராது என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது.












Click it and Unblock the Notifications