தவெகவில் இணைந்த ஓபிஎஸ் மாஜி ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர்! விஜயுடன் கைகோர்த்த சென்னையின் முக்கிய புள்ளி
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாள் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜய் முன்னிலையில் அவர் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர்தான், ஜே.சி.டி பிரபாகரின் மகன் தவெகவில் இணைந்திருந்தார். இதனையடுத்து தற்போது ஜே.சி.டி பிரபாகர் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்துள்ள இவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் பணியாற்றிய இவர், பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளராகவும் பின்னர் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவிலும் இயங்கி வந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார்.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோது, மேலும் பல முக்கிய தலைகள் கட்சியில் இணையும் என்று பேசப்பட்டது. இதனைடுத்து தற்போது ஜே.சி.டி.பிரபாகர் இணைந்துள்ளார்.
இந்த இணைவு குறித்து பேசிய அவர், "நான் முதன் முதலில் எம்ஜிஆரை பார்த்தபோது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்ததோ, அந்த அளவுக்கு விஜய் மீது நம்பிக்கை இருக்கிறது. விஜய் தமிழகம் முழுவதும் அமைதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். வீடுதோறும் விஜய் முழக்கமாக இருக்கிறது. ஜெயலலிதா புகழை எடுத்துரைக்க தடையில்லாத இயக்கமாக தவெக இருக்கிறது.
தவெகவில் பொறுப்பு இல்லாவிட்டாலும், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கையில் நான் கட்சியில் இணைந்திருக்கிறேன். இனியும் கட்சியினர் பலர் இணைவர்கள்" என்று கூறியிருக்கிறார்.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 1980 மற்றும் 2011 என இரண்டு சட்டமன்ற தேர்தல்களில், அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்தான் ஜே.சி.டி.பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications