சேலம் புறப்பட்டாரா எடப்பாடி பழனிச்சாமி? என்ன நடக்கிறது அதிமுக- பாஜக கூட்டணியில்?
சென்னை: அதிமுக- பாஜக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சேலம் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்
கடந்த நாடாளுமன்றம், சட்டசபைத் தேர்தலை போல் அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இடபங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்து கடந்த சனிக்கிழமை அதிமுகவும், பாஜகவும் சென்னை அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

பாஜக தலைவர் அண்ணாமலை
இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டியிலேயே தெரிந்தது. அதாவது இடபங்கீட்டு பேச்சுவார்த்தை தொடரும் என பேட்டி அளித்திருந்தார். இந்த இழுபறிக்கு காரணம் பாஜக அதிமுகவிடம் நிறைய இடங்களை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் நியாயமான துடிப்பு இருக்கும் போதிலும் மறுபக்கம் பாஜகவினரின் விமர்சனங்கள் அதிமுகவில் சிலரை கோபத்தில் ஆழ்த்தியதாகவே கூறப்படுகிறது.

பாஜக எம்எல்ஏ
இதற்காகவே அண்மையில் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை விமர்சித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் கூட விட்டு விட்டு சென்றனர். எனவே அதிக இடங்களை பாஜகவுக்கு ஒதுக்கினால் சொந்த கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி வரும் என்பதால் அதிமுக கறார் காட்டுகிறது.

மேயர் பதவி
பாஜக மேயர் பதவிகளை அதிகம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் கடலூர், விழுப்புரம், தருமபுரி நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துவிட்டது. இது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

பாஜக தனித்து போட்டியா
இதனால் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்து அதற்கான ஆலோசனையை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக- பாஜக இடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனினும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவது சந்தேகம்தான். மேலும் இன்றைய தினம் அதிமுக சார்பில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications