"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்" மத்திய அரசுக்கு நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் கடிதம்
சென்னை: பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடியாத சூழலில், 2வது சர்வதேச விமான நிலையம் கொண்டு வர திட்டமிடப்பட்டது. சென்னையில் 2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை என்றால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2வது மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகியது.

பரந்தூரில் விமான நிலையம்
இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்கள் போராட்டம்
இருந்தும் விவசாயம், நீர்நிலைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து 60வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக எம்பி கோரிக்கை
இந்த நிலையில் பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மத்திய ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கருணாநிதி பெயர்
அந்தக் கடிதத்தில், வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று, சென்னையில் அமைய இருக்கும் இரண்டாவது விமான நிலையத்துடன், ரயில் நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க வேண்டும். அதேபோல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications