நடிகை கஸ்தூரி என்ன தீவிரவாதியா? செய்தது தப்புதான்! எதற்கு இந்த பாரபட்சம்! தமிழிசை அட்டாக்
சென்னை: நடிகை கஸ்தூரி என்ன தீவிரவாதியா, அவரை கைது செய்ததில் மட்டும் பாரபட்சம் ஏன் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரை கொன்றவர்களை கண்டுபிடித்தாகிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வஉசி பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவபடத்திற்கு இதுகுறித்து தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஓராண்டுக்கு முன்பு திருமாவளவன் சிப்காட் தொழிற்சாலை அமைக்குமாறு கேட்டதால் அதை ஓராண்டுக்குள் நான் நிறைவேற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியென்றால் திருமாவளவன் மாநாடு போட்டு மதுவிலக்கு கோரிக்கை வைத்தாரே அதை எப்போது நிறைவேற்றுவீர்கள் என முதல்வர் ஸ்டாலின் சொன்னால் நன்றாக இருக்கும்.

சகோதரி கஸ்தூரி, தவறான கருத்துகளை சொன்னார். அதற்கான மன்னிப்பையும் கேட்டார். அவரை ஒரு தீவிரவாதி போல் தமிழக காவல் துறை நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலையாகி இத்தனை மாதங்கள் ஆகின்றன, இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
அது போல் வேங்கைவயலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்து மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்தவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இது போல் எத்தனையோ வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத போது கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவது பாரபட்சம். சென்னை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் டாக்டர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியதை நான் நியாயப்படுத்தவில்லை.
அதேவேளையில் அவருடைய தாய்க்கு உண்டான சிகிச்சையை அளிக்க வேண்டும். அவருக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை. இதனால் தனியார் மருத்துவமனையும் அவரை அணுகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவதையோ கிளினிக் வைத்திருப்பதையோ தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தமான கருத்துடையவள் நான். இது போல் ஒரு சட்டம் தமிழகத்தில் வந்தால் அரசு மருத்துவர்கள் இன்னும் கவனமாக வேலை பார்ப்பர். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
தெலுங்கு பேசும் மக்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என மிகவும் கொச்சையாக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். இதையடுத்து அவர் கைதாவது உறுதியானது.
அவரது இருப்பிடத்தை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில்தான் அவர் ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஹரியின் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை தட்டினர்.
ஆனால் கஸ்தூரி திறக்கவில்லை. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம் என போலீஸார் எச்சரித்ததும் கஸ்தூரி கதவை திறந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தயாரிப்பாளர் ஹரியின் செல்போனில் இருந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு கஸ்தூரி போன் செய்தாராம். அதை வைத்துதான் தனிப்படை போலீஸ், அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்தது.
இதையடுத்து அவரை சாலை மார்க்கமாக சென்னைக்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர். அவர் காரில் இருந்து இறங்கும் போதே எந்த டென்ஷனும் இல்லாமல் சிரித்தபடியே இறங்கினார். நீல நிற சுடிதார், பிங்க் நிற பேண்ட், சிவப்பு துப்பட்டா அணிந்து கொண்டிருந்தார். அவரை பெண் போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை நவ.29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கஸ்தூரி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications