பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வி... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு..!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இது அதிமுக-பாஜக இடையேயான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக மற்ற 16 இடங்களில் தோல்வியை தழுவியது.
மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என விரும்பிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரங்களை தாமே நேரடியாக கவனித்துக்கொண்டார். அப்படி அவரே நேரடியாக தலையிட்ட நிலையில், கூட்டணியில் கோட்டை விட்டுவிட்டதாக கூறுகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

மக்கள் மீண்டும் அதிமுக ஆட்சியை தான் விரும்பினார்கள் என்றும் கூட்டணிக் கணக்கில் தவறுகள் நிகழ்ந்ததால் தோல்வியை தழுவ வேண்டிய நிலை வந்ததாக அவர் கூறியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்த காரணத்தால் தான் சிறுபான்மையினர் முழுமையாக தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
பாஜகவுடன் மட்டும் கூட்டணி சேராமல் இருந்திருந்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர்ந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இந்த கருத்தால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications