"திமுக ஆட்சியில் அவல நிலைகள்.. அதிமுக ஆட்சியில் சாதனைகள்.." பன்ச் வைத்து பேசும் எம்.ஆர். விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் விடியாத ஆட்சியில் அனைவரையும் மிரட்டி வருவதாகக் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டக் கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஐடி பிரிவினர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "தமிழகத்தில் விடியாத திமுக ஆட்சியின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தமிழக ஊடகங்கள் தயக்கம் காட்டி வருகிறது. அதனை எதிர்கொள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சமூகவலைத்தளத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். 10 ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளை சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அயராது உழைக்க வேண்டும்
இப்படி பொதுமக்களுக்கு அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் மேலும் இந்த விடியாத திமுக அரசு அனைத்து தரப்பினரையும் மிரட்டி வருகின்றனர். தற்போது யாருமே திமுக அரசுக்கு எதிரான செய்தியையும் வெளியிடுவதில்லை. ஜனநாயகத்தின் ஒரு தூணாக அறியப்படும் பத்திரிக்கைத் துறையினர். யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

கையாலாகாத தனம்
இந்த 8 மாத திமுக ஆட்சிக் காலத்தில் திமுக அரசின் கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது" என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆவேசமாகப் பேசினார். முன்னதாக கடந்த ஆண்டு அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுக்கு இந்தத் தோல்வி பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த முறை அதை மாற்றி மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் அதிமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications