இதை கவனிச்சீங்களா.. முதல்வர் மனம் வெதும்பி இருக்காரு.! காரணத்தைச் சொல்லும் செல்லூர் ராஜூ
சென்னை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகச் சாடி பேசினார்.
அதிமுகவில் ஒரு பக்கம் உட்கட்சி குழப்பம் நிலவி வந்தாலும் கூட, மறுபுறம் சத்தமில்லாமல் பல்வேறு நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார்.
இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாசெக்கள் கலந்து கொண்டனர். உடல்நலக்குறைவு காரணமாக கே.பி.முனுசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிமுக பொன்விழா கூட்டங்கள் தொடர்பாகவும், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

செல்லூர் ராஜூ
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் மைத்ரேயன் ஓபிஎஸ் அணிக்குச் சென்றது குறித்தும் அவர் பேசி உள்ளார்.

யாரும் பேசியது இல்லை
செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "அதிமுக மிகவும் வலிமையாக உள்ளது. இதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக உடைந்துள்ளதாகக் கூறுகிறார். திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மேளத்திற்கு இருபக்கமும் அடி போலத் தனது நிலைமை உள்ளதாக முதலமைச்சர் பேசி உள்ளார். எந்தவொரு முதல்வரும் எந்தக் காலகட்டத்திலும் இப்படிப் பேசியதே இல்லை.

கவனீச்சீங்களா
முதல்வர் ஸ்டாலின் மனம் வெதும்பி உள்ளார். இதன் காரணமாகவே இப்படிப் பேசுகிறார். அவர் தனது நிர்வாகத் திறன் குறைபாட்டைக் கூறுகிறாரா? கட்சியின் நிர்வாகிகளைக் குறிப்பிடுகிறாரா? எனத் தெரியவில்லை. அந்தளவுக்கு முதல்வர் ஸ்டாலின் பயத்துடன் உள்ளார். மேலும், அதிமுகவுக்குக் கொள்கை எதுவும் இல்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார். திமுகவை எதிர்ப்பது மட்டும் தான் அதிமுக கொள்கையாம்.

நலத்திட்டங்கள்
எந்தவொரு கொள்கையும் இல்லாத அதிமுகவை மக்கள் 32 ஆண்டுகள் ஆட்சியில் வைத்திருப்பார்களா? அதிமுகவால் அச்சமடைந்ததால் அவர் இப்படியெல்லாம் பேசி வருகிறார். தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்த கட்சி அதிமுக... நீண்ட காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டு வந்து உள்ளது. ஆனால், திமுக திட்டங்கள் எல்லாம் கால நலத்திட்டங்கள் மட்டும் தான்" என்றார்.

குடும்ப அரசியல்
தொடர்ந்து திமுகவை மிகக் கடுமையாகச் சாடி பேசிய செல்லூர் ராஜூ, "தனது குடும்ப உறுப்பினர்களைக் கட்சிக்குள் கொண்டுவருவது மட்டும் தான் திமுகவின் கொள்கை. இப்படியிருக்கும் போது, அவர் எங்களைப் பார்த்து கொள்கை இல்லை என்று சொல்கிறார். எம்ஜிஆர் வகுத்துத் தந்த கொள்கையில் நாங்கள் வழி மாறாமல் சரியாகச் சென்று கொண்டு இருக்கிறோம்" என்றார்.

மைத்ரேயன்
மைத்ரேயன் ஓபிஎஸ் அணிக்குச் சென்றது குறித்துப் பேசிய அவர், "மைத்திரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் கட்சிக்காக எந்த ஒரு செயலையும் செய்தது இல்லை. ஒரு நூலைக் கூட எடுத்து வைத்தது இல்லை. அதிமுகவினர் யாருமே அவருடன் இல்லை. அவரால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை. சென்றுவிட்டதால் எந்த பாதிப்பும் இல்லை. இதையெல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications