“பாஜகவின் பி டீம் சீமான் தான்.. அவரை நம்பி எங்க வாழ்க்கையே வீணாப்போச்சு” - கொந்தளித்த நாதக தம்பிகள்!
சென்னை: பாஜகவின் பி டீம் அல்ல, மெயின் டீமே சீமான் தான் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் நிர்வாகிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சிலரது பேச்சைக் கேட்டு சீமான் செயல்படுவதால் கட்சி சிதைந்து கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நம்பி தங்களது இளமைக்காலமும் பொருளாதாரமும் வீணாகப் போய்விட்டது, பாஜகவின் மறைமுக ஆதரவுடன் தான் நாதக நடக்கிறது, அண்மையில் ஒரு பாஜக கூட்டத்தில் நாதகவை விமர்சிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர் என நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மண்டல செயலாளர் மகேந்திரன், அம்பத்தூர் மேற்கு பகுதி செயலாளர் அஜ்மல் அகமது, அம்பத்தூர் மேற்கு செய்தி தொடர்பாளர் ராஜ்குமார், அம்பத்தூர் துணை தலைவர் முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெளியேறி உள்ளனர்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர். அப்போது சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சங்பரிவார் சித்தாந்தத்துடன் செயல்படுவதாகவும், மதவாத அரசியலை பின்தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதாகவும் பிஜேபியின் பி டீமாக செயல்படுவதால் தமிழ் தேசிய அரசியலை நம்பி வந்த நாங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நம்பி தங்களது இளமைக்காலமும் பொருளாதாரமும் வீணாகப் போனது என்று தெரிவித்துள்ளனர். வாரிசு அரசியல் என திராவிட கட்சிகளை குற்றம் சாட்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், கட்சியில் வாரிசு அரசியலை தான் முன்னெடுத்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2 முறையாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டவரின் மகனுக்கே அடுத்த முறை சீட் வழங்க திட்டமிட்டு, கட்சிக்காக வேலை செய்யாத அவருக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் பேசிய அவர்கள், "தமிழ் தேசிய அரசியலை எதிர்பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு சென்றால் அங்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். இது இலையுதிர் காலம் இலைகள் உதிரத்தான் செய்யும் என்ற சீமான் கூறியுள்ளார், நாங்கள் அனைவரும் கட்சியின் ஆணி வேர், நாங்கள் இல்லாமல் கட்சி ஒன்றுமில்லை.
இதற்கு மேலும், கட்சிக்காக எங்கள் உழைப்பைப் போட்டு ஒன்றுமில்லாமல் போக முடியாது. சமீபகாலமாக வலதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்து, ஆர்.எஸ்.எஸ் சார்பு நிலையை எடுக்கிறார். தமிழ் தேசிய அரசியலை பேசுபவர்களை வெளியேற்றி வருகிறார். இது நல்லது இல்லை. சீமானுக்கு முழுக்க முழுக்க நிர்வாகத் திறன் இல்லை என்பதையே அவரது அண்மைக்கால செயல்பாடுகள் காட்டுகின்றன" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications