அஞ்சல் துறையில் அதிரடி.. தபாலில் வீடு தேடி வருகிறது ஓட்டுநர் உரிமம்.. இதுதான் ரூல்ஸ்.. முளைத்த டவுட்
சென்னை: பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவை ஸ்பீடு போஸ்ட் மூலமாக அனுப்பும் புதிய சேவை முறை தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.. இதன் விதிமுறைகள், வழிகாட்டு முறைகள் என்னென்ன? இந்த புதிய அறிவிப்பினால் ஏற்படப்போகும் நன்மைகள் என்னென்ன?
பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் திட்டத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் இதுதான்:

- மாநிலத்தில் உள்ள 91 ஆர்டிஓ அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து ஒப்புதல் அளிக்கப்படும் பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை இனி விரைவு அஞ்சல் மூலமாகவே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்படமாட்டாது.
சான்றுகள்: - ஒருவேளை உங்களது செல்போன் நம்பர், முகவரி இரண்டுமே தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அத்தகைய நேர்வுகளில் பதிவுச்சான்றுகளும் ஓட்டுநர் உரிமங்களும் விரைவு அஞ்சல் மூலம் டெலிவரி செய்யப்படமாட்டாது. அத்தகைய தபால்கள் மீண்டும் ஆர்டிஓ மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு தபால் துறையால் டெலிவரி செய்யப்படாமல் திருப்ப அனுப்பப்பட்டுவிடும்.
- அத்தகைய நேர்வுகளில் வாகன் மற்றும் சாரதி மென்பொருள் சரியான முகவரி மற்றும் அலைபேசி எண்ணைப் பதிவு செய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி, அவ்விரு விவரங்களும் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் மீண்டும் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இந்த நேர்வுகளில் விண்ணப்பதாரர் ஆர்டிஓ மற்றும் பகுதி அலுவலகத்தை அணுகினாலும் அவருக்கு உரிய சான்று நேரடியாக வழங்கப்படமாட்டாது.
தெளிவான சான்று: - பொதுமக்கள் இந்த சேவையினைப் பெறுவதற்கு தங்களின் அலைபேசி எண்ணையும் மட்டுமே தங்களது ஓட்டுநர் உரிமம்/பதிவுச் சான்று விண்ணப்பங்களில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மாறாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் முகவரியையோ அலைபேசி எண்ணையோ குறிப்பிட்டு இருந்தால் அவர்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் தகுதிச்சான்று தற்காலிக முடக்கம் செய்யப்படும்
- விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளபடி மீண்டும் வாகன்/சாரதி மென்பொருளில் தங்களது சரியான முகவரியையும் அலைபேசி எண்ணையும் உள்ளீடு செய்து மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பின்னரே அது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் /தகுதிச்சான்று விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: ஓட்டுனர் உரிம கட்டணம் ரூ.520 + தபால் செலவுக்காக ரூ.50 ஆகும்.. இந்த கட்டணங்களை செலுத்தினாலே போதும்.. ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச்சான்றிதழும் (ஆர்சி புக்) தபால் மூலமே உங்களுக்கு கிடைத்துவிடும்.
மொத்தத்தில், இந்த விரைவு அஞ்சல் சேவை திட்டத்தினால், ஆர்டிஓ அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வருவது கணிசமாகக் குறையும்.. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்படும். இடைத்தரகர்களுக்கு இதில் வேலையில்லை..யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவும் தேவையில்லை. அந்தவகையில் இந்த திட்டத்துக்கு ஆதரவுகள் நிறையவே கிடைத்து வருகின்றன.
விண்ணப்பம்: அதேசமயம் சில சந்தேகங்களையும் இந்த திட்டம் எழுப்பி வருகிறது.. சொந்த வீடு வைத்திருப்பவர்கள், நிரந்தர முகவரியை, விண்ணப்பத்தில் பதிவிடலாம்.. ஆனால், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்த நடைமுறை சாத்தியமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பெரும்பாலும், வாடகை வீட்டிற்கு செல்லும்போது 11 மாதங்கள் மட்டுமே பலரும் ஒப்பந்தம் போடுகிறார்கள்.. அப்படியிருக்கும்போது, நிரந்தர முகவரியை எப்படி கொடுக்க முடியும்? ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஊழல், இடைத்தரகர்கள் நடமாட்டம் குறையும் என்றாலும், வாடகை வீடுகளில் உள்ளவர்களுக்கு இதனால் உள்ள நடைமுறை சிக்கல்களையும் யோசிக்க வேண்டியுள்ளது என்கிறர்கள்
நடைமுறை: இரு சக்கர வாகனம் மட்டுமல்லாமல், கார்கள், பள்ளி வாகனங்களுக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும். சாலையில் விதிமுறைகள்படி வாகனங்கள் ஓட்ட கற்றுத்தர வேண்டும்... அதுடன் சுற்றுலா வாகனங்களுக்கும் ஓட்டுநர்கள் உரிய அனுமதி பெற்று ஓட்ட வேண்டும் என்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications