தயா அழகிரிக்கு "பதவியா".. அடடே.. அண்ணன் அழகிரி பக்கத்திலேயே ஸ்டாலின்.. 8 வருடமாச்சே.. குஷியில் மதுரை
முக அழகிரியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் சிறப்புடன் கொண்டாடினார்கள்
சென்னை: முக அழகிரி ஆதரவாளர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.. மதுரை மாநகரில் இவர்கள் ஒட்டி உள்ள போஸ்டர்கள், திமுகவின் ஒட்டுமொத்த கவனத்தையும் திருப்பி வருகிறது.. என்ன காரணம்?
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பெரியப்பாவான முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை, நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.
இதுகுறித்து அப்போது உதயநிதி சொல்லும்போது, "அமைச்சராக பதவியேற்ற பிறகு, என்னுடைய பெரியப்பாவை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன்... பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை ஆசிர்வதித்தனர்... மனநிறைவோடு வாழ்த்தினர்" என்றார்..

சந்தோஷம்
அதேபோல அழகிரி சொல்லும்போது, "தம்பி மகன் என்ற முறையில் எங்களிடம் ஆசி பெற வந்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன்தான். அவருக்கும் ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளேன். நான் திருநகரில் உள்ள வீட்டில் இருந்தபோது என் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட சந்தோஷம் என்னுடைய தம்பி முதல்வராக இருப்பது, மகன் அமைச்சராகி உள்ளார்" என்று அழகிரி நெகிழ்ந்து கூறியிருந்தார்.. இந்த சந்திப்பானது அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக திமுகவில் மகிழ்ச்சியை உண்டாக்கியது... அதேசமயம், சில ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.

கோபாலபுரம்
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, எத்தனையோ முறை ஸ்டாலின், மதுரை செல்ல நேர்ந்தது.. ஒவ்வொரு முறை மதுரை செல்லும்போதெல்லாம் அழகிரியை சந்திக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டன.. ஆனால், ஒருமுறைகூட சந்திப்பு நடக்கவில்லை.. மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் அழகிரி கோபாலபுரம் வரும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோபாலபுரம் வீட்டிலேயே, இருவரும் சந்தித்து கொள்ளாத தருணங்கள்தான் நடந்தன. முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அவர் வரவில்லை.
ஆனால், திடீரென அழகிரியை, உதயநிதி சந்தித்ததற்கு சில யூகங்கள் வலம்வந்தன..

வெங்கடேசன்
அதன்படி, ஒருவேளை உதயநிதியை முதலில் அழகிரியிடம் அனுப்பிவைத்துவிட்டு, அதன்மூலம் தன்னுடைய ஆதரவையும் நெருக்கத்தையும் ஸ்டாலின் வெளிப்படுத்த முயன்றிருக்கலாம் என்றார்கள்.. அதுமட்டுமல்ல, கடந்த முறை மதுரை தொகுதிக்கு திமுகவிலேயே எத்தனையோ பேர் முயன்றார்கள்.. ஆனால், கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக ஒதுக்கிவிட்டது. துணை மேயர் பதவியையும் எம்பி வெங்கடேசன் ஆதரவாளருக்கே பெற்று தந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது.. ஏற்கனவே மதுரை திமுக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடிவரும் நிலையில், மீண்டும் அழகிரி தரப்பே மதுரையை கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் திமுக மேலிடம் நினைக்கிறதாம்..

எம்பி சீட்
இதனால், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டது. அதுபோல, அழகிரி ஆதரவாளர்களும் குஷியானார்கள்.. காரணம், எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்தால், அது தென்மண்டல திமுகவுக்கு பலத்தை பெற்றுதரும் என்றும், தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும், என்று நம்பி உள்ளனர்.. மதுரை தொகுதியில் தயாஅழகிரிக்கு எம்பி சீட் வழங்கப்பட்டாலும், அதுவும் தங்களுக்கு பிளஸ் ஆக அமையும் என்று கணக்கு போடுகிறார்கள்.. அதன்வெளிப்பாடுதான், அழகிரியின் பிறந்தநாள் விழா போஸ்டர்களில் தென்பட்டதை காண முடிந்தது..

தயா அழகிரி
திமுகவிலிருந்து நீக்கப்பட்டதில் இருந்து, தன்னுடைய பிறந்தநாளை பொதுவெளியில் கொண்டாடாமல் தவிர்த்து வந்தார் அழகிரி.. ஆனால் இப்போது அப்படி இல்லை.. அழகிரி ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.. அதுவும், ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயா அழகிரி இப்படி எல்லாருமே இணைந்திருப்பது போல போஸ்டர்களை தயாரித்து, மதுரை முழுவதும் ஒட்டி.,.. அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த போஸ்டரில் ஸ்டாலினும், அழகிரியும் இருவரின் போட்டோக்களும் இடம்பெற்றிருந்தாலும், "எங்களின் எதிர்காலமே" என்று பெரிய சைஸில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

பூரிப்பு
அதுமட்டுமல்ல, அழகிரியின் ஆதரவாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். 8 வருடங்களுக்கு பிறகு, மதுரை அழகிரி தரப்பினர் குஷியிலும் பெருத்த நம்பிக்கையிலும், உற்சாகத்திலும் உள்ளனர்.. இந்த போஸ்டர்கள்தான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. எப்படியோ, வரும் எம்பி தேர்தலில், ஒரு எம்பி பதவி அழகிரி குடும்பத்துக்கு நிச்சயம் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.... இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. மதுரை திமுகவில், சமீப காலமாகவே உட்கட்சி மோதல் வெடித்து வருவதால், அதை சரிக்கட்ட இப்போதே திமுக மேலிடம் முயற்சிக்கிறதாம்.. அழகிரி குடும்பத்தை முன்னிறுத்தும்போது, அதிருப்திகள் விலகும் என்பதுடன், மதுரை தொகுதியில் வளர துவங்கி வரும் பாஜகவுக்கும் செக் வைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறதாம்..!!












Click it and Unblock the Notifications