Exclusive: பெரியார் சிலையை உடைப்பதாக பேச்சு.. சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு! எச்.ராஜா தகவல்
சென்னை: பெரியார் சிலையை உடைப்பேன் என பேசியது, திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாஜக தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அதே ஆண்டில், 2018 ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக ட்விட்டரில் தரக் குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க நிர்வாகிகள், தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.
கனிமொழியை விமர்சனம் செய்த புகார் தொடர்பாக ஈரோடு நகர காவல்துறையும் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் ஹெச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா தாக்கல் செய்த வழக்கை கடந்த முறை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும், மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையை முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14 ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.
அதில் 41 பக்க தீர்ப்பில் ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என தீர்மானிப்பதாகவும். இரு பதிவுகளும் ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவ்வாறு எச்.ராஜா அனுப்பவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்கள் அவர் தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
மேலும் இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், இதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென எச். ராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," ஆறு மாத சிறை தண்டனையை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. தற்போது எனது வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். மற்ற தகவல்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications