வரும் 16ஆம் தேதி திமுக மருத்துவ அணி நடத்தும் ஸ்பெஷல் மெடிக்கல் கேம்ப்ஸ்! பழைய ஸ்பீடு இல்லையே!
சென்னை: புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை அன்று திமுக மருத்துவ அணி சார்பில் "சிறப்பு மருத்துவ முகாம்கள்" நடைபெறும் என அதன் செயலாளர் எழிலன் நாகநாதன் அறிவித்துள்ளார்.
சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தும் விவகாரத்தில் திமுக மருத்துவரணியை விட அதிமுக மருத்துவரணி சற்று வேகம் காட்டியதும் நேற்று முன் தினம் சிட்லபாக்கத்தில் கேம்ப் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மருத்துவ முகாம்கள் குறித்து தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, தி.மு.க. மருத்துவ அணிச் சார்பில், மிக்ஜாம் புயல் பேரிடர் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், 16.12.2023 சனிக்கிழமை அன்று "சிறப்பு மருத்துவ முகாம்கள்" நடைபெறுகிறது.''
''பொது மருத்துவ பரிசோதனைகள், காலரா தடுப்பு சிகிச்சைகள், டெட்டனஸ் தடுப்பூசிகள், பூஞ்சை தொற்று தடுப்பு சிகிச்சைகள், சேற்றுப்புண் தடுப்பு மருந்துகள், வயிற்றுப்போக்கு தடுப்பு சிகிச்சைகள், பருவ மழைக்கால காய்ச்சல், தொற்று மற்றும் தொற்றா நோய் சிகிச்சைகள் இம்முகாமில் வழங்கப்படும்.''
''பேரிடர் காலத்தில் தொடர் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், அரசு மற்றும் அரசு சாரா களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், பாதிப்படைந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை முகாமிற்கு அழைத்து, பயனடையச் செய்ய வேண்டும் என மருத்துவ அணி நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம்.'' இவ்வாறு அதில் எழிலன் நாகநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications