வளர்ச்சி எனும் பெயரிலான... அரச பயங்கரவாதத்தின் நிஜமுகத்தை காட்டும் பகத் பாசிலின் மாலிக் திரைப்படம்!
சென்னை: கேரளாவை 2009-ம் ஆண்டு குலைநடுங்க வைத்த பீமாபள்ளி- செரியத்துரா மோதல்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பகத் பாசிலின் படம் மாலிக். அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
2009-ம் ஆண்டு கேரளாவின் பீமாபள்ளி- செரியத்துரா முஸ்லிம்- கிறிஸ்தவர்களிடையேயான மோதலில் போலீஸ் துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் 6 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 27 பேர் படுகாயமடைந்தனர். மத மோதலால் துப்பாக்கிச் சூடு என்ற பல்லவியை கேரளா அரசு பாடியது.

இந்த மதமோதலில் 16 வயது சிறுவனை பலி எடுத்தது கேரளா போலீஸ். அத்தகைய காட்சிகள்தான் அன்றைய கேரளாவை உலுக்கி எடுத்திருந்தது. அதை மையமாகக் கொண்டதே மாலிக் திரைப்படம்.
இது ஒரு வழக்கமான கமல்ஹாசனின் நாயகன் போன்ற படமாக கடக்க முடியாது; இந்த திரைப்படமானது அரசியல், அரசு, அரச பயங்கரவாதம் என்பதை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.
படத்தின் காட்சி அமைப்புகள், நகர்த்தப்படும் விதம், நடிகர்களின் உடல்மொழி திறன் குறித்து எல்லாம் நாம் நுணுக்கமாக விவாதிக்கவில்லை. இந்தப் படம் எதை பேசுகிறது என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பீமாபள்ளி முஸ்லிம்கள்- செரியத்துரா கிறிஸ்தவர்கள் ஒற்றுமை எப்படி அரசியல்வாதிகளின் ஈவு இரக்கமற்ற வளர்ச்சி என்கிற பெயரிலான நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கிறது? இந்த தடையை உடைக்க எந்த எல்லைக்கும் செல்லும் அரசியல்வாதிகள், அரசின் அதிகாரிகள் பற்றி பேசுகிறது.
பீமாபள்ளி- செரியத்துராவை நாம் கண்முன்னே கண்டது இல்லை; ஆனால் ஜல்லிக்கட்டு புரட்சியின் போது போலீஸ் செய்தது என்ன என்பதை நாம் அறிவோம்; தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட கோர துப்பாக்கிச் சூட்டு படுகொலைகளுக்கும் சாட்சிகளே நாம்.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பகத் பாசில், ஒரு காட்பாதர் போல கடத்தல் தொழில் செய்து மக்களுக்கு உதவுகிறார். பகத் பாசிலுக்கு வரும் சிக்கல்கள், முஸ்லிம்- கிறிஸ்தவர்களிடையே மோதல்களை உருவாக்கி குளிர்காயும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என ஒவ்வொரு நகர்விலும் நாம் காணும் உண்மைக்குப் பின்னிருக்கும் அரச பயங்கரவாதம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அரசும் அரசியல்வாதிகளும் தாங்கள் நினைத்ததை அடைவதற்காக பொதுமக்களில் ஒருபிரிவினரை மதத்தின் பெயரால் எப்படி தூண்டிவிடுகின்றனர்? அவர்களுக்கே தெரியாமல் அவர்களை எப்படி பலியாடுகளாக பலி கொடுக்கிறார்கள்? என்பதை எளிமையாக சொல்லி இருக்கிறது மாலிக் திரைப்படம்.
இதனை வெறும் தனிமனிதர்களின் விருப்பங்கள், சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்கிற கதை அம்சமாக நம்மால் கடக்க முடியாது. ஏனெனில் படம் தொடங்கும்போதே நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறது தடா சட்டம் எனும் ஆட்தூக்கி சட்டத்தின் கீழ் கதாநாயகன் மாலிக் கைது செய்யப்படுகிற காட்சி.
தமிழில் கதாநாயக பிம்பங்கள்தான் படத்தின் மையங்களாக இருக்கும்; தமிழில் கதாநாயகன் மூலம் நடைமுறைக்கு உதவாத வெத்து வேட்டு அரசியல் வசனம் பேசும் படங்கள் ஏராளம். ஆனால் ரத்த களறிகளின் பின்னுள்ள அரசியலை பேசுகிற படங்கள் அரிது தமிழில்..
மாலிக் படத் தயாரிப்பு முறைமை குறித்தும் ஆதங்கப்படலாம- ஆனா மாலிக் திரைப்படத்தின் மைய கரு பாராட்டுக்குரியது. நிச்சயம் நாம் பார்ப்பதற்குரியது!












Click it and Unblock the Notifications