தீவிரவாத தடுப்பு பிரிவு என மிரட்டி டிஜிட்டல் அரெஸ்ட்! ரூ.20 லட்சம் அபேஸ்.. 14 நாளில் மீட்ட போலீசார்!
சென்னை: தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி என மிரட்டி, சென்னையை சேர்ந்த பெண்ணிடம் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசடியில் பறிக்கப்பட்ட ரூ.20 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் 14 நாட்களில் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் சைபர் மோசடிகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. நம் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் இந்தியர்கள் ரூ.52,976 கோடியை இழந்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.19,812 கோடியை இந்தியர்கள் இழந்தனர். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1,897 கோடி ரூபாயையும் மக்கள் ஆன்லைன் மோசடிகளால் இழந்துள்ளனர்.

சென்னை முகப்பேர் மேற்கு, அண்ணாமலை அவென்யூவில் வசித்து வருபவர் லதா (54). கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருபவர். இவரது செல்போனுக்கு கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து அவர், 'நீங்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்துள்ளீர்கள். உங்களது வங்கி கணக்கு விபரங்களை பரிசோதித்ததில், இது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். சிறிது நேரத்தில் உங்களையும் உங்கள் கணவரையும் கைது செய்ய உங்கள் வீட்டுக்கு வர உள்ளோம்' என மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன லதா, 'நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை' என மறுத்துள்ளார். ஆனால், அந்த நபர் வீடியோ கால் வாயிலாக தொடர்ந்து மிரட்டி, அவர்களை 3 நாள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் டிஜிட்டல் கைது செய்து வைத்துள்ளார்.
பின்னர், "நீங்கள் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றால், நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதையும் பரிமாற்றம் செய்யுங்கள். உங்கள் மீது குற்றம் இல்லை என்றால், விசாரணை செய்துவிட்டு மீண்டும் பணத்தை உங்களது வங்கிகணக்குக்கு அனுப்பி விடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லதா, அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு மிரட்டல் விடுத்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லதா, இதுதொடர்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவன கணக்குக்கு அந்த பணம் சென்றிருப்பதை உறுதி செய்து, அந்த மாநில போலீஸார் உதவியுடன் லதாவின் ரூ.20 லட்சத்தை முடக்கினர். பின்னர், அந்த பணத்தை 14 நாட்களில் மீட்டு லதாவிடமே ஒப்படைத்துள்ளனர். மேலும், போலீஸ் அதிகாரி என மிரட்டிய நபரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் தமிழக காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஏதேனும் சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற அவசர எண்ணை அழைக்கலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications