சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் .. 'ஆபீசர்ஸ்' முரட்டு வேலை.. விசாரித்தால் ட்விஸ்ட்
சென்னை: சென்னை மாநகராட்சியில் 'லைசென்சு' அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாதன்.. இவர் சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள மீன் கடையில் திடீரென்று சோதனை நடத்த சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 3 நபர்கள் மாநகராட்சி அதிகாரிகள் என கூறிக்கொண்டு ஆய்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் 'லைசென்சு' அதிகாரியாக 49 வயதாகும் லோகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். லோகநாதன், சென்னை மாநகராட்சி 5-வது மண்டலம் 62-வது கோட்டத்தில் தான் 'லைசென்சு' அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சென்னை மாநகராட்சி அதிகாரி லோகநாதன், அண்மையில் சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள மீன் கடை ஒன்றுக்கு திடீரென்று சோதனை நடத்தினார். அப்போது அந்த கடையில் ஏற்கனவே 3 நபர்கள் தங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறிப்பிட்ட 3 பேரும் உண்மையான அதிகாரி வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான், சிந்தாதிரிப்பேட்டை மீன் கடைக்காரரை மிரட்டி ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. உண்மையான மாநகராட்சி அதிகாரி லோகநாதனை பார்த்த 3 பேரும் அங்கிருந்து நைசாக தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரும் போலி அதிகாரிகள் என்பது மாநகராட்சி அதிகாரி லோகநாதனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி லோகநாதன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் போலி அதிகாரிகள் பற்றி புகார் கொடுத்தார். உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய போலி மாநகராட்சி அதிகாரிகளான ராயப்புரத்தை சேர்ந்த பால்ராஜ் (30), புதுப்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் (37), கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாபு (30) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் மாநகராட்சி அதிகாரி வேடத்தில் பல்வேறு கடைக்காரர்களை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான 3 போலி அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications