போலி டாக்டர் பட்டம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பேருக்கு மட்டுமே இலவசம்.. விசாரணையில் ஹரீஷ் பகீர்
அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் கொடுத்தவரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் கொடுத்த ஹரீஷின் வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்ஷன் மற்றும் ஹூயூமன்ரைட்ஸ் கவுன்சில் (சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்) எனும் தனியார் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல், இசையமைப்பாளர் தேவா, யூடியூபர்கள் கோபி, விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ் உள்பட 50 பேருக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் டாக்டர் பட்டத்தை வழங்கினார். ஆனால் விழா ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்பட்ட இந்த பட்டம் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அப்போது அவர் கூறுகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விருது வழங்கும் நிகழ்ச்சி என்றுதான் எங்களிடம் அனுமதி கேட்டனர். நாங்கள் முதலில் மறுத்தோம். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.

அனுமதி
அதன்பேரில் நாங்கள் அனுமதி அளித்தோம். ஆனால் அவரையும் இவர்கள் அண்ணா பல்கலைக்கழக்தில் நடக்கும் டாக்டர் பட்டம் வழங்கும் விழா என்றுதான் அழைத்து வந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சிக்காக 58 ஆயிரம் பணத்தை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலின் நிர்வாகி ஹரீஷ் வங்கி மூலம் செலுத்தினார்.

அண்ணா பல்கலைக்கழகம்
ஞாயிற்றுக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்த ஆசிரியர்களும் இருக்கமாட்டார்கள். இதை தெரிந்தே அவர்கள் அந்த நாளையும் நேரத்தையும் தேர்வு செய்திருக்கிறார்கள். டாக்டர் பட்டம் என்பது பல்கலைக்கழகம்தான் தர வேண்டும். தனியார் நிறுவனம் கொடுக்கக் கூடாது. இதுவே சட்டவிதிமீறல்தான்.

விழா ஏற்பாட்டாளர்
எனவே விழா ஏற்பாட்டாளர் மீது நாங்கள் போலீஸில் புகார் கொடுப்போம் என்றார். நடிகர் வடிவேல் அந்த நிகழ்ச்சிக்கு வராததால் அவருடைய வீட்டுக்கே சென்று பட்டத்தை வழங்கியுள்ளனர். இந்தநிலையில் ஹரீஷ் மீது கோட்டூர்புரம் போலீஸில் அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் புகார் அளித்தார். இதனிடையே தன்னை சிறப்பு விருந்தினராகவே அழைத்தார்கள், தனக்கும் இந்த டாக்டர் பட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என வள்ளிநாயகம் விளக்கம் அளித்திருந்தார்.

ஹரீஷுக்கு முன் ஜாமீன் மறுப்பு
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹரீஷை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரீஷ் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி டி.வி. தமிழ்செல்வி விசாரித்தார். ஹரீஷுக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் விசாரணைக்கான ஆதாரத்தை கலைத்துவிடுவார் என அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

ஹரீஷ் கைது
இதையடுத்து அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி தமிழ் செல்வி தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஆம்பூரில் பதுங்கியிருந்த ஹரீஷை போலீஸார் கைது செய்தனர். அவருடன் இருந்த இடைத்தரகர் கருப்பையாவையும் கைது செய்தனர். இந்த நிலையில் ஹரீஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இதுவரை 50 பேருக்கு போலியாக டாக்டர் பட்டத்தை ஹரீஷ் வழங்கியுள்ளதாகவும் அவற்றில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பிரபலங்களுக்கு மட்டுமே இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கியதாகவும் மற்றவர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர் பட்டத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் ஆடுதுறையில் ஹரீஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதன் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications