ஆசைக்கு இணங்கினால் பதவி, வீடு.. சென்னை பெண் போலீஸை உல்லாசத்துக்கு அழைத்த நபர் யார்?
சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டிய போலி போலீஸ் அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்தார். அந்த புகாரில் அந்த பெண் போலீஸ் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நான் பணியில் இருந்தபோது, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு எனக்கு செல்போனில் பேசினார். அவர் தான் எனக்கு எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்பதை தெரிவிப்பார்.

அன்றைய தினம் அவர் பேசும்போது, பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நீ செல்கிறாயா? என்று கேட்டார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். சற்று நேரத்தில் அந்த பெண் போலீஸ் அதிகாரி உன்னிடம் பேசுவார் என்றும், உன்னிடம் நீ செய்ய வேண்டிய பணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்றும் என்னிடம் கூறினார்.
அப்போது செல்போனில் பேசிய பெண் ஒருவர், தான் சென்னையில் கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றுகிறேன் என்றும், என்னை அவருக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்தார். மேலும் தான் சொல்லும் இந்த வேலையை பொறுப்போடு செய்தால் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வாங்கி தருவதாகவும், சொந்தமாக வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டினார். அப்போது நான் அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அந்த நபர் நீ ஒரு பெரும் செல்வந்தரை நான் சொல்லும் இடத்தில் சந்திக்க வேண்டும் என்றார்.
மேலும் அவரது ஆசைக்கு இணங்கி அவர் சொல்லும்படி நடந்து கொண்டால் பதவியும், வீடும் உன்னைத் தேடி வரும் என்று கூறினார். இந்த பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், உடனே அவரிடம் நான் அதுபோன்ற பெண் இல்லை என்றும், பதவி உயர்வும், வீடும் எனக்கு தேவையில்லை என்று திட்டவட்டமாக மறுத்தேன்.
திடீரென்று அந்த நபர் ஆண் குரலில் பேசத்தொடங்கினார். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் நீ பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார். நான் உங்கள் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று தெரிவித்தேன். உடனே அந்த நபர் போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
பெண் போலீஸ் அதிகாரி போல் பேசி என்னை மிரட்டிய குறிப்பிட்ட நபர் யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் மனு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு சென்றது. உடனே நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் காவ்யா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஹேமா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில், பெண் போலீசை பெண் குரலில் பேசி உல்லாசத்துக்கு அழைத்த போலி போலீஸ் அதிகாரி யார் என்று கண்டறியப்பட்டது. அவரது பெயர் பெரியசாமி (வயது 32) என்றும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாராபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்,
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட போலி போலீஸ் அதிகாரியிடம் தீவிர விசாரணை நடத்திய போது, அவர் இது போல் செல்போனில் பெண்களிடம் பேசி ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை உல்லாச வலையில் வீழ்த்துவாராம். இதன் மூலம் அவர் பெரிய அளவில் பணம் சம்பாதித்துள்ளதும் தெரிய வந்தது.
அவர் மீது திருப்பூர், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட போலீசில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவர் பெரும்பாலும் பெண் போலீசை குறி வைத்தே உல்லாச அழைப்பு விடுத்து வழக்குகளில் சிக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications