இன்று மட்டும் ரஜினி கட்சியை அறிவித்திருந்தால்.. வேற லெவலில் இருந்திருக்குமே 2021.. ரசிகர்கள் வேதனை
சென்னை: ரஜினிகாந்த் கட்சி குறித்து அறிவிப்பதாக கூறிய டிசம்பர் 31 இன்றுதான்... இன்று மட்டும் அவர் அறிவித்திருந்ததால் புத்தாண்டு எப்படியிருந்திருக்கும் தெரியுமா.. கண்ணீருடன் வேதனையில் ரசிகர்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ஆம் ஆண்டு அறிவித்த நாள் முதல் ரசிகர்கள் தரையில் நடக்கவில்லை என்றே சொல்லலாம். அப்படியே வானத்தில் பறப்பது போன்று சந்தோஷத்தில் இருந்தார்கள்.
இந்த அறிவிப்பால் 2018-ஆம் ஆண்டு புத்தாண்டு களை கட்டியது. ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடினர்.

ரசிகர் மன்றம்
இதையடுத்து ஜனவரி 1, 2018 ஆம் ஆண்டின் போது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இதையடுத்து மன்றத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பது என பரபரப்பாக காணப்பட்டது. 2019-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பொங்கல்
ஆனால் தீபாவளி போச்சு, பொங்கல் போச்சு தலைவர் கட்சி தொடங்குவது குறித்து எதையும் சொல்லவில்லை. எப்போது கேட்டாலும் அதற்கு இப்போது என்ன அவசரம் என தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். 2019- நாடாளுமன்றத் தேர்தலிலாவது கட்சி தொடங்குவார் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

மருத்துவமனை
இப்படியே போக டிசம்பர் 3-ஆம் தேதி கட்சியை ஜனவரி மாதம் தொடங்குவேன் என்றார். மேலும் அதுகுறித்த அறிவிப்புகளை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இதனிடையே அவரது ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கட்டாய ஓய்வு
அவர் கட்டாயம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் கட்சி தொடங்கப் போவதில்லை என கடந்த 29-ஆம் தேதி அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மனமுடைந்தனர். கடந்த இரு தினங்களாக இயல்பான பணிகளில் கூட ஈடுபட முடியாத அளவுக்கு மன உளைச்சல் அவர்களை சுற்றுகிறது. இளம் வயது ரசிகர்களுக்கே இப்படி என்றால் ரஜினியை ஆரம்பத்திலிருந்தே பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலை சொல்லவே வேண்டாம்.

டிசம்பர் 3
ரஜினி சொன்ன டிசம்பர் 31 இன்றுதான்! ஒரு வேளை ரஜினி இன்று கட்சி குறித்து அறிவித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என ரசிகர்கள் விவரிக்கிறார்கள். டிசம்பர் 3-ஆம் தேதியை விட கொண்டாட்டங்கள் அதிகமாகவே இருந்திருக்கும். புத்தாண்டான 2021 வருட பிறப்பும் களை கட்டி கலக்கலாக இருந்திருக்கும். தமிழகத்தில் பெரிய கொண்டாட்டமாகவே இருந்திருக்கும்.

புத்தாண்டு
ஆனால் தற்போது புத்தாண்டு வாழ்த்துக்களை கூட ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். கடந்த 2019, 2020 புத்தாண்டுகள் ரசிகர்களுக்கு எப்பவும் போல் மகிழ்ச்சியாக போனது. ஆனால் இந்த 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறார்கள். ரஜினி மனம் மாறுவாரா என எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications