சூழ்கிறது மேகங்கள்.. மேலிடம் போட்ட உத்தரவு.. தமிழக தலைமை எடுத்த அஸ்திரம்.. அதுவும் "வீடுதோறும்"..!
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய உத்தரவு ஒன்றினை மேலிட காங்கிரஸ் பிறப்பித்துள்ளதாம். இதையடுத்து தமிழக காங்கிரசும் ஜரூர் வேகத்தில் களமிறங்கி உள்ளது.
ராகுல் காந்தி எம்பி பதவி விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. கடந்த வாரம், நாடாளுமன்ற மக்களவை செயலகம் தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பதாக அறிவித்தது..
இதனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியை அடைந்தனர்.. உடனடியாக கண்டன பதிவுகளையும் பதிவு செய்தனர்..

நிச்சயம் நடப்பேன்
அப்போது முதல், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கையிலெடுத்தனர்.. மற்றொருபுறம், ராகுல் காந்தி டெல்லியில் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டு, அவருக்கு கெடு வழங்கியிருக்கிறது.. கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஒரு எம்பியாக, எண்.12 துக்ளக் சாலையில் இருக்கும் வீடே, ராகுலின் அடையாளமாக பார்க்கப்பட்ட சூழலில், இப்போது அந்த அட்ரஸை இழக்கிறார் ராகுல் காந்தி... இதையடுத்து, நாட்டின் பல்வேறு திசைகளில் இருந்து "என் வீடே, உங்கள் வீடு" என்ற முழக்கம் ஒலிக்க ஆரம்பித்தது.. இது சோஷியல் டிரெண்டாகியும் வருகிறது..

டாக்குமெண்ட்
இப்படிப்பட்ட சூழலில், டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான பெண்மணி ஒருவர், மங்கோல்புரியில் இருக்கும் தன்னுடைய 4 அடுக்கு வீட்டை ராகுலுக்காக எழுதித் தர முன்வந்திருந்தார்.. காங்கிரஸ் கட்சி, டெல்லி சேவாதளத்தின் மகளிரணி தலைவியான அந்த பெண்மணி பெயர் ராஜ்குமாரி குப்தா.. "இந்த வீட்டுக்கான இடம் என்னை போன்ற பலருக்கு இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது கிடைத்தது.. இப்போது, அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து வலிய அகற்றப்படும் ராகுல் காந்திக்கு பரிசாக அதனை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். அவரை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களை வழங்க உள்ளேன்" என்றும் கூறியிருந்தார்.

அழகிரி அதிரடி
ராகுலுக்காக தன் சொந்த வீட்டை தர முன்வந்த இந்த நிகழ்வும் சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.. அதன்படி தமிழ்நாட்டில் வீடுகள்தோறும் காங்கிரசை கொண்டு சேர்க்கும் வகையில் புதிய செயல்திட்டம் ஒன்றை மாநில தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார். வீடுகள் தோறும் "என் வீடு ராகுல் வீடு" என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் இதன் பிரதான நோக்கம் என்கிறார்கள்..

ராகுல் வீடு
ஒவ்வொரு நிர்வாகியும் தாங்கள் விரும்பும் தலைவர்களின் போட்டோக்களுடன் தன்னுடைய படத்தையும் போட்டுக்கொள்ளலாம். ஆனால், "என் வீடு ராகுல் வீடு" என்பதுதான் பளிச்சென்று தெரியவேண்டும் என்று அட்வைஸ்களை தெரிவித்துள்ளார்களாம்.. இதையடுத்து, எல்லா இடங்களிலும் ஸ்டிக்கர்கள் துரிதமாக ஒட்டப்பட்டு வருகின்றன.. நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கண்டிப்பாக ஒட்ட வேண்டும்... இதைதவிர தங்கள் பகுதிகளில் தெரிந்தவர்கள், நண்பர்கள் காங்கிரஸ் அனுதாபிகள் வீடுகளில் ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

ஸ்ட்டிராங் நம்பிக்கை
நிர்வாகிகளும் தங்கள் போட்டோக்கள் பளிச்சென்று தெரியும் வகையில் ஒட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, வருகிற எம்பி தேர்தலிலும், ஓட்டு கேட்க, "ஸ்டிக்கர்" ஒட்டுவோம் என்று இப்போதே நெகிழ்ந்து சொல்லி வருகிறார்களாம்.. இதனால் தமிழக காங்கிரஸ் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகிறது.. ஏற்கனவே ராகுல் காந்தியின் பாதயாத்திரை, தேசம் முழுவதும் மிகுந்த வரவேற்பினை பெற்று தந்தது பாஜகவின் கண்ணை உறுத்துவதாக சொல்கிறார்கள்.

சீண்டும் பாஜக
கடந்த வருடம் முன்புவரை, விஸ்வரூப வளர்ச்சியில் பாஜக உருவெடுக்க, காங்கிரஸ் கட்சியோ, அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்டதே என்று அக்கட்சியின் தொண்டர்கள் கலக்கத்திலும், வருத்தத்திலும் நொந்து போயிருந்த நேரத்தில்தான், ராகுல் காந்தியின் பாதயாத்திரை, எழுச்சியையும், உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் தொண்டர்களிடம் ஏற்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழலில், ராகுல் காந்தியின் எம்பி பதவி விவகாரத்தில் பாஜக சீண்டவும், இதுவே ராகுலுக்கு பிளஸ் பாயிண்ட்டாகவும் மாறிவருகிறது.. அந்த எழுச்சிதான் தற்போது தேசம் முழுவதும் படர்ந்து வருவதாக சொல்கிறார்கள்.. இது தமிழகத்திலும் எதிரொலிக்க துவங்கி உள்ள நிலையில், அழகிரியின் இந்த புது அறிவிப்பானது, பாஜகவின் கவனத்தையும் திருப்பி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications