மதுரவாயல் டூ துறைமுகம்.. சென்னையின் பெருமை ஈரடுக்கு பாலம்.. கூவத்தில் கவனிச்சீங்களா? தமிழக அரசு மாஸ்
சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலுக்கு, புதிதாக உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.. இதற்கான பணிகளும் ஆரம்பமாகின..
ஆனால், அதற்குள் அதிமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துவிடவும், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக கூறி, தடை விதித்துவிட்டது. இதனால் பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

துறைமுகம்: இதற்கு பிறகு 10 வருடம் கழித்து, மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, இதே திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத்திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதியும் வழங்கப்பட்டு பணிகளும் ஆரம்பமாகின.
சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் பணிகளும் துவங்கப்பட்டன. இதில், கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்க முனைப்பு காட்டப்பட்டது..
வாகனங்கள்: இதன் முதல் அடுக்கில், பஸ்கள், பைக்குகள், 4 சக்கர வாகனங்கள் செல்லும்... 2 வது அடுக்கில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை கனரக சரக்கு வாகனங்கள் இயங்கும் வகையில் 4 வழி சாலையாக அமைக்கப்படுகிறதாம்..
இந்த ஈரடுக்கு பறக்கும் சாலை மொத்தம் 604 தூண்களால் அமைக்கப்படவிருக்கிறது. அதில், 375 தூண்கள் கூவம் நதிப் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளிலும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
நேப்பியர் பாலம்: அதுமட்டுமல்ல, கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் வரை இடையே உள்ள தூரத்தில் அமைக்கப்படும் ஈரடுக்கு பாலமானது 20.6 கிலோமீட்டர் தூரத்தில் 7 என்ட்ரிகள் வைக்கப்பட உள்ளதாம். சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும், காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றார்கள்.
இந்நிலையில், 2 அடுக்கு மேம்பால திட்டம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.. 2 அடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள் மற்றும் 13 சரிவுப் பாதைகள் வரப்போகின்றனவாம்..
தூண்கள்: மேம்பாலபணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் தொடங்கியிருப்பதால், சில இடங்களில் மண் பரிசோதனையும் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத்தவிர, மேலும், மதுரவாயலில் சாலை நடுவே, மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணிகளும் ஆரம்பமாகியிருக்கின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலத் திட்ட பணிகள் வேகம் எடுத்துள்ளன.. எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
துறைமுகம்: மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்ததுடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. எனவே, இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியிருக்கின்றன..
அதேபோல, அரும்பாக்கத்தில் 4ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்குகிறது. துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளது" என்றனர்.
ஆக மொத்தம், 4 பகுதிகளாக கட்டப்படும் இந்த சாலைத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் முடிவுடையும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பாலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: இந்த மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டால், சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும் என்றும் பயண நேரம் குறையும்.. பகல் நேரங்களிலும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படலாம். துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும். மதுரவாயல் பகுதியில் இருந்து சரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்துநெரிசல் இல்லாமல் துறைமுகம் செல்லும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications