2 லட்ச ரூபாய்க்கு குழந்தை விற்பனை.. எட்டே நாளில் தாயை மிரட்டி விற்பனை செய்த தந்தை.. சென்னையில் பரபர!
சென்னை: பிறந்து எட்டு நாட்களே ஆன ஆண் குழந்தை 2 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனைவியை மிரட்டி, தனது குழந்தையை விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான சத்தியதாஸ். இவரது மனைவி ஷியாமளா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக ஷியாமளா கருவுற்றிருந்தார். இந்நிலையில் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் கொடுத்து விடுமாறு சத்யதாஸுன் நண்பரான எண்ணூரைச் சேர்ந்த கணேஷ் கேட்டுள்ளார்.

2 லட்சம் ரூபாய் தருவதாகவும், குழந்தையை தருமாறும் கணேஷ் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே 25 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸ் ஆக சத்தியதாஸ் - ஷியாமளா தம்பதியர் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சியாமளாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து எட்டு நாட்களே ஆன நிலையில் மீதி பணத்தைக் பெற்றுக்கொண்டு குழந்தையை சத்தியதாஸ் - ஷியாமளா தம்பதியர், கணேஷ் - சரண்யா தம்பதிக்கு கொடுத்துள்ளனர். ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த தங்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை பிரிய மனம் இல்லை என தாய் ஷியாமளா, கணேஷ் தம்பதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, குழந்தையை வாங்கியவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு தாய் ஷியாமளாவிடம் ஒப்படைத்தனர்.
ஆட்டோ டிரைவர் சத்தியதாஸ் தனது மனைவியை மிரட்டி குழந்தையை விற்பனை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறந்து எட்டு நாட்களே ஆன ஆண் குழந்தை 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications