அப்பா மலம் அள்ளும் தொழிலாளி.. மகன் உலகம் வியக்கும் ரோபோடிக்ஸ் விஞ்ஞானி!
சென்னை: இளைஞர் கென்னித்ராஜ் உலக அளவில் ரோபோடிக் துறையில் 6 ஆவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தவர் என்பதும் அவரது தந்தை ஒரு மலம் அள்ளும் தொழிலாளி என்பதும் பலரது கவனத்தை ஈர்க்கும் செய்தியாக அமைந்துள்ளது.
வறுமையை வென்று வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பற்றி எவ்வளவோ கதைகள் உண்டு. அதில் வித்தியாசமான கதையைக் கொண்டவர் இளைஞர் கென்னித்ராஜ் அன்பு. இன்று இவர் ஒரு ரோபோடிக் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனியில் சி.இ.ஓ. ஆக இருக்கிறார். ஒரு காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளில் பணியாற்றியவர். இன்று மக்களுக்காகத் தனது கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த வேலையை விட்டுவிட்டார்.

இந்த ரோபோடிக் ஸ்பெஷலிஸ்ட்டின் அப்பா ஒரு மலம் அள்ளும் தொழிலாளி. ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்த இவர் இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் விஞ்ஞானி. சாதாரண அரசுப் பள்ளியில் படித்து இன்று அசுர சாதனையைச் செய்துள்ள இந்த இளைஞரின் வாழ்க்கை வலிகளால் நிரம்பியது. அதை வென்று முன்னேறி இருக்கிறார்.
எப்படி நடந்தது இது? இவர் பட்ட கஷ்டங்கள் என்ன? கென்னித்ராஜ் கதையைக் கேட்டால் கல்நெஞ்சம் கூட கண்ணீர் வடிக்கும், அந்தளவுக்கு துயரமானது. அவர், தன் வாழ்க்கை பற்றிப் பேசுகையில்“ஸ்கூல் சாப்பாடு போடுவார்கள். அதனால் நமக்குச் சாப்பாடு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக நான் ஸ்கூலுக்குப் போனேன். ஒன்றாம் வகுப்பு முடிந்து 2ஆம் வகுப்பு போனேன். நானும் என் நண்பனும் தான் தினமும் வியாசர்பாடியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சேர்ந்தே படிக்கப் போவோம்.
ஒருநாள் நானும் நண்பனும் ஸ்கூலுக்குப் போகும்போது என் அப்பாவை போலவே ஒருவர் சாக்கடை அள்ளிக் கொண்டு இருந்தார். தூரத்திலிருந்து அவரைப் பார்த்தபோது அவராக இருக்குமோ என்று ஒரு சந்தேகம். அதை ஏற்க முடியவில்லை. நம்ம அப்பாவாக இருக்கக் கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டேன். ஆனால், அங்கே இருந்தது என் அப்பாதான். மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அப்பாவுடன், 'நீ ஏன் சாக்கடையை அள்ளும் வேலை செய்கிறாய்? அந்த வேலை செய்ய வேண்டாம். உன் மேலே நாற்றம் அடிக்கும்' என்று சொன்னேன்.
அதற்கு அப்பா, 'நான் படிக்கவில்லை. அதனால் இந்த வேலை செய்கிறேன். நீ எப்படியாவது நன்றாகப் படித்துவிடு. உனக்கு நல்ல வேலை கிடைக்கும்' என்றார். அந்த ஒரு வார்த்தைதான் என் வாழ்க்கையை மாற்றியது. 8 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு பேட்டரியை ஒரு மோட்டாருடன் சேர்த்தால் அதை மின்சார சக்தி பெற்றுச் சுற்ற ஆரம்பித்ததை அறிவியல் கூடத்தில் பார்த்தேன். அப்போதுதான் நாம் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஆசை வந்தது. 12 ஆம் வகுப்பில் எந்த குரூப் எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. ஒரு ஆசிரியர்தான் என்னை ஃப்ர்ஸ்ட் குரூப் எடுக்கச் சொன்னார். அதன் மூலம் இன்ஜினியரிங் படிக்கலாம் என்றார். அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யலாம் என்றார். அப்படித்தான் படித்தேன்.
1995இல் வேலை தேடி சொந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த குடும்பம்தான் என் குடும்பம். எனக்கு 5 வயது இருக்கும் போது அப்பா தோளில் தூக்கிக் கொண்டு வந்தார். சென்னையில் யாரையுமே தெரியாது. சொந்தக்காரர்கள் யாருமே சென்னையில் கிடையாது. அப்பா சென்னையில் பல இடங்களில் வேலை தேடினார். அவர் படிக்கவில்லை. அதனால் நல்ல வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை. மூன்று நாள் வரை வீட்டிலிருந்த அண்டா, குண்டான் சாமான்களை விற்று அதை வைத்துச் சாப்பிட்டோம். 4ஆம் நாள் அப்பாவுக்கு ஒரு வேலை கிடைத்தது. அதுதான் மலம் அள்ளும் வேலை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "12 ஆம் வகுப்பு முடிந்ததும் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என் அப்பாவிடம் சொன்னேன். ஓங்கி கன்னத்தில் அறைந்தார். அவரிடம் படிக்க வைக்கக் காசு இல்லை. ஒரு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் தேவை. அப்பாவினால் அது முடியாது. இருந்தாலும் நான் விடாப்பிடியாக நின்றேன். அவர் தனது நிலைமையைச் சொல்லி அழுதார். நான் நன்றாக மார்க் எடுத்ததால் எனக்கு பொறியியல் படிக்க வங்கிக் கடன் கிடைத்தது. அதை அப்பாவிடம் சொன்னேன். அதன் பின் இன்ஜினியரிங் சேர்ந்தேன். 4 வருடம் படித்து முடிந்ததும் அமெரிக்க கம்பெனியில் வேலை கிடைத்தது. 2014இல் இந்திய அளவில் ரோபோடிக் துறையில் 2வது இடம் வந்தேன். ரஷ்யாவுக்குச் சென்றேன். அங்கே உலக அளவில் 6 ஆவது இடத்தைப் பிடித்தேன்.
அன்றைய தேதியில் இந்திய அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஆள் நான் மட்டும்தான். பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்யும் போது மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். 2018 ஆம் ஆண்டு மலக்குழியில் சிக்கி மரணம் அடையும் மனிதர்களின் உயிரிழப்பைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். மலம் அள்ளுவதற்காக மலக்குழியில் மனிதர்கள் இறங்குவதற்கு முன் அதில் விஷ வாய்ப்பு கசிவு உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு ரோபோடிக் கருவியைக் கண்டுபிடித்தேன். அதை இலவசமாக மக்களுக்குக் கொடுத்தேன். இண்டர்நெட் உதவியே இல்லாமல் இயக்கக் கூடிய ஜிபிஎஸ் கருவியைத் தயாரித்து இலவசமாக மக்களுக்கு உரிமை கொடுத்தேன்” என்கிறார்.












Click it and Unblock the Notifications