நெல்லை மக்களுக்கு குஷி.. மெட்ரோ ரயில் வரலன்னா என்ன.. வரப்போகுது லைட் மெட்ரோ.. அடடே செம!
சென்னை: நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது "லைட் மெட்ரோ" செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் இன்றி சரியான நேரத்திற்கு சென்று வர முடியும் என்பதால் மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிப்பது தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடக்கின்றன.

அதன்படி, மதுரை, கோவையில் மெட்ரோ அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுகள் முடிந்துவிட்டன. அங்கே மெட்ரோ அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் முடிந்துவிட்டது. எந்த வழித்தடத்தில் மெட்ரோ இயக்கப்படும், எங்கே ரயில் நிலையங்கள் என்றும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனால் இங்கே விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும். அதன்பின் இங்கே கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது போக சேலம், திருச்சியிலும் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன. இங்கு இப்போதுதான் முதல் கட்ட ஆய்வுகள் முடிந்து உள்ளன. சேலத்தில் 40 கிமீ தொலைவிற்கும், திருச்சியில் 38 கிமீ தொலைவிற்கும் மெட்ரோ அமைக்க உள்ளனர். இந்த நிலையில்தான் நெல்லையில் மெட்ரோ ரயில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது "லைட் மெட்ரோ" செயல்படுத்துவதற்கான ஆய்வு நடக்கிறது.
நெல்லையில் லைட் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே திட்ட அதிகாரிகள் கூறுகையில், "மெட்ரோ ரயில் திட்டத்தை நெல்லையில் செயல்படுத்துவதற்காக முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருந்தது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது லைட் மெட்ரோவிற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி லைட் மெட்ரோ ரயிலுக்கான பாதையினை எந்த வழித்தடத்தில் அமைப்பது, எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்றும், வழித்தடத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் 30ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ள சேலம் திருச்சி சாத்தியக்கூறு அறிக்கையோடு, நெல்லை லைட் மெட்ரோ திட்ட அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று ரயில்வே திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை செலவு ஆகும் என்ற நிலையில், லைட் மெட்ரோவிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி தான் செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications