சென்னையில் ஆவின் பால் வாங்க கட்டுப்பாடு! புயல் சின்னத்தால் 8 இடங்களில் 24 மணிநேரமும் இயங்கும் பாலகம்
சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது நாளை புயலாக மாறலாம் என்று கூறப்படும் நிலையில் சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் பாக்கெட்டுகள் கிடைக்க சென்னையில் 8 இடங்களில் ஆவின் பாலகம் 24 மணிநேரமும் செயல்படும் என்றும், ஒருவருக்கு 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும். கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

டிசம்பர் மாதம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது. இதனால் இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தான் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ‛‛வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளது. இந்த புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ஃபெங்கல் என பெயரிடப்படுகிறது. இந்த புயலானது மேற்கு வடமேற்கு பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் சென்னையில் பொதுமக்களுக்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க ஆவின் பாலகம் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆவின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 8 இடங்களில் 24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் இயங்க உள்ளது. சென்னை அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம், அண்ணா நகர் அட்நஸ் டவர் பூங்கா பாலகம், மாதவரம் பால்பண்ணை பாலகம், பெசன்ட் நகர் பாலகம், வண்ணாந்துறை பாலகம், சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம், விருகம்பாக்கம் பாலகம், மயிலாப்பூர் சிபி ராமசாமி சாலை பாலகமும் ஆகியவை 24 மணிநேரம் இயங்கும்.
சென்னையில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் ஒருநபருக்கு அதிகபட்சமாக 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் . தேவையான அளவு ஆவின்பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் ஆவின் பாலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னை மாநகரில் தேவையப்படும் இடங்ளில் தற்காலிக பால் விற்பனை நியைலங்கள் அமைத்து பால், பால் பவுடர் விநியோகிக்கப்படும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications