“ரோபோ சங்கர் அடிக்கடி சொல்வார்”.. பண மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சண்டை பயிற்சியாளர் உருக்கம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவால் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மறைந்த ரோபோ சங்கருக்கு சண்டைப் பயிற்சியாளர் ஒருவர் பண மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பண மாலை அணிவித்ததற்கான காரணத்தை உருக்கமாக அவர் கூறியது அனைவரையும் கலங்கச் செய்தது.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர் மயங்கி விழுந்ததை அடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரோபோ சங்கரின் உடல்நிலை நேற்று மோசமானது. அவருக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ரோபோ சங்கர் மறைவு
இந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ரோபோ சங்கர் மரணமடைந்த செய்தி அறிந்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே பேரதிர்ச்சியில் ஆழ்ந்தது. நேற்று இரவே ரோபோ சங்கரின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு முதலே அவரது உடலுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் ரோபோ சங்கர் என்ற பெயர் நிலை பெற்றது.
மீண்டு வந்தவர் மரணம்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், தனது தனித்துவ உடல்மொழியாலும், திறமையாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலையில் இருந்து குணமடைந்த அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் துவங்கினார். இந்நிலையில் தான் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
நடிகர் ரோபோ சங்கர், கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர். நடிகர் ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, அஜித்குமார் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு கமல்ஹாசன் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. 46 வயதே ஆன ரோபோ சங்கரின் மறைவு, திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பண மாலை
இந்நிலையில் ரோபோ சங்கர் உடலுக்கு சண்டை பயிற்சியாளர் ஒருவர் பண மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரோபோ சங்கர் அண்ணன் ரொம்ப அன்பானவர், பாசமானவர். எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். அந்த வழியெல்லாம் இன்றைக்கு ஒட்டுமொத்தமாக அடைக்கப்பட்டது போல இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் மனதிற்குள் பதறிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் குழுவில் ஒரு 350 பேர் இருக்கிறோம். எங்களுக்கு ரோபோ சங்கர் அண்ணன் தான் எல்லாம் செய்வார். இன்று அந்த மலையே சாய்ந்துவிட்டது. ரோபோ சங்கர் அண்ணன் எப்போதும் மற்றவர்களுக்காக பணத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார். நாம் செத்தால் ஆயிரம் பேர் வருவார்கள், பணம் கூடவே வராது எனச் சொல்லிக் கொண்டிருப்பார். அதனால் இன்று பண மாலை போட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறோம்" என உருக்கமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications