நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் : சென்னையில் பெண் வாக்காளர்கள் அதிகம்
சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும் இதில் ஆண் வாக்காளர்கள் 30,23 ,803 வாக்காளர்களும் 30,93,355 மற்றும் மூன்றாம் பாலின் வாக்காளர்கள் 1,576 உள்ளனர்.
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. சென்னையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும் இதில் ஆண் வாக்காளர்கள் 30,23 ,803 வாக்காளர்களும் 30,93,355 மற்றும் மூன்றாம் பாலின் வாக்காளர்கள் 1,576 உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டங்களை நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், மாவட்டங்களுக்கு நேரில் சென்று தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களின் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்களர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 30,23,803, பெண் வாக்காளர்கள் 30,93,355 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1,576 பேர் உள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் வார்டு-137இல் 58,620 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் வார்டு-159 இல் 3,116 வாக்காளர்களும்,உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 5,284 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் (மண்டலம்-9) 622 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, மணலி மண்டலத்தில் (மண்டலம்-2) 97 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், புதிதாக பெயர் சேர்க்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவோ கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications