ஒருமுறை மட்டுமே 'ரயில்வே' என கூறிய நிர்மலா! அதுவும் ஆந்திராவுக்காக.. மொத்தமாக கைவிரிப்பு
சென்னை: மோடி 3.O அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இதில் ரயில்வே துறை குறித்த அறிவிப்புகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனால், இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிடவில்லை.
இந்திய ரயில்வே: உலகின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, மிகப்பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக நடக்கும் ரயில் விபத்துக்கள் இந்தியன் ரயில்வேக்கு ஒரு களங்கமாக மாறியிருக்கிறது. ரயில் பயணங்கள் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த காலம் போய், ரயில் பயணத்தில்தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்கிற பேச்சு தற்போது அடிப்பட தொடங்கியுள்ளது.

விபத்து: ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது, இது தவிர ஆங்காங்கே சரக்கு ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த விவாதங்கள் ஓய்வதற்குள் கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியது.
எதிர்பார்ப்பு: இந்த தொடர் விபத்துக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயில்வே துறை சிறப்பாக செயல்படவில்லையா? என்றும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரயில்வே துறை குறித்து பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
வந்தே பாரத்: ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது.
ஏமாற்றம்: மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும்.
இன்றைய தேதியில் நாட்டின் முக்கியமான நகரங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனை இரண்டாம் கட்ட நகரங்களை நோக்கி விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருந்தன. ஆனால் இது குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை.
வந்தே மெட்ரோ: அதேபோல சிறு நகரங்களை இணைக்கும் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருந்தது. நடுத்தர தொலைவிலான நகரங்களை இணைக்கும் இந்த ரயில்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஏசி வசதி, பயணிகளைக் கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, அதி நவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. ஆனால் இது குறித்தும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது தவிர மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் மற்றும் நமோ பாரத் உள்ளிட்டவை குறித்த இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்மலா சீதாராமன் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஒரேயொருமுறை: இன்னும் சரியாக சொல்வதெனில் 'ரயில்வே' எனும் வார்த்தையை நிர்மலா சீதாராமன் ஒரேயொரு மட்டுமே உச்சரித்தார். ஆந்திராவை பற்றி பேசும்போது, "ஆந்திராவில் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தில் உள்ள கொப்பர்த்தி முனையிலும், ஹைதராபாத்-பெங்களூரு தொழில்தடத்தில் உள்ள ஓர்வக்கல் முனையிலும் தண்ணீர், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலைகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications