Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதி நெருக்கடி.. ரேசன் கடைகளில் துவரம் பருப்பு விற்பனை நிறுத்தமா? கருணாநிதி சொன்னது நினைவிருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிச்சந்தைகளில் துவரம் பருப்பு ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உளுந்தப்பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை நடுத்தர மக்களுக்காக ரேசன் கடைகளில் மலிவு விலையில் துவரம்பருப்பு, உளுந்தப்பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

Financial crisis Stopping sale of toor dal and palm oil in ration shops TN Government decision

தமிழக ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும் சர்க்கரை கிலோ, 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்; 1 லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை மத்திய அரசு வழங்குகிறது. சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்குகிறது. இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சிறப்பு பொது வினியோக திட்டத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அத்திட்டத்திற்கான கால அவகாசத்தை, அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் நீட்டித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் துவரம்பருப்பு, பாமாயில் போன்றவைகளை ரேசன்கடைகளில் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் உள்ளன. பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, பாமாயில், உளுந்தம் பருப்பு சரிவர வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டங்கள், அறிக்கைகள் வாயிலாக பொதுமக்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் கடைகளில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் உளுந்தம் பருப்பு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு ரேஷன் கடைகளில் இருந்த பட்டியலில் உளுந்தம் பருப்பு இருந்த இடம் அழிக்கப்பட்டுவிட்டது. அரசு டெண்டர் விட்டு உளுந்தம் பருப்பை கொண்டு வரவேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அரசிடம் நிதி இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் மக்கள் அதிக விலை கொடுத்து வெளிச்சந்தைகளில்தான் உளுத்தம் பருப்பு வாங்கி வருகின்றனர்.

அரிசி, கோதுமை, பாமாயிலும் தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குவது கிடையாது. துவரம் பருப்பும் நல்ல துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. தற்போது கனடா மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பை தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைக்கு வினியோகம் செய்கிறது.

தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க மாதம் 20000 டன் துவரம் பருப்பு, 2 கோடி லிட்டர் பாமாயில் தேவைப்படுகிறது. அது டெண்டர் கோரி தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் , பருப்பு கொள்முதலில், விலை ஏற்ற, இறக்கம் பிரச்னையாக இருப்பதுடன் அரசும் நிதி நெருக்கடியில் இருக்கிறது.

அதனால் பருப்பு பாமாயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்க நிதித்துறை தாமதித்து வருகிறது. எனவே நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் சிறப்பு பொது வினியோக திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு பதிலாக, அதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்று, அதிகாரிகளும் பணியாளர்களும் யோசனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலவுவதாக அவ்வப்போது முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர். கடுமையான நிதி நெருக்கடியிலும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

வெளி சந்தைகளில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரேசன்கடைகளில் விற்பனை செய்யப்படும் பாமாயிலும், துவரம்பருப்பு விற்பனை நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த பொருட்களை வெளிச்சந்தைகளில்தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஏற்கனவே காய்கறிகள் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு என விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் பருப்பு, எண்ணெய் போன்றவைகளையும் அதிக விலை கொடுத்து வாங்கினால் இல்லத்தரசிகளின் பட்ஜெட்டில் துண்டு விழும்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், மானிய விலையில், அத்தியாவசிய தேவையான பருப்புகளும் விற்பனை செய்யும் திட்டம் கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இது எப்படி எந்த நேரத்தில் தொடங்கப்பட்டது என்று ஓருமுறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருக்கிறார்.

கடந்த "2007ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் விலைவாசி அதிகமாக இருந்தது. நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஒருநாள் காலை 6.30 மணிக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எனக்கு போன் செய்தார். நாளிதழ் பார்த்தியா என கேட்டார். அப்போது நான் 13வது பக்கம் பார்த்தேன் என சொன்னேன். என்ன செய்தி எனக் கேட்டார். துவரம் பருப்பு விலை ரூபாய் 65 ஆக அதிகரித்துவிட்டது என சொன்னேன்.

உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை உணராமல், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் துறை சார்ந்த செயலாளர் ஒருவரையும் நிதித்துறை அதிகாரி ஒருவரையும் அழைத்து, வருடத்திற்கு நாம் குறைந்த விலையில் பருப்பு வகைகளை கொடுத்தால் எவ்வளவு செலவாகும் என கேட்டறிந்த போது அவர்கள் 300 கோடி ரூபாய் ஆகும் என சொன்னார்கள். அதை கருணாநிதியிடம் தெரிவித்தேன்.

அப்போது கருணாநிதி என்னிடம், நீ ஒரு கிலோ பருப்புக்கு என்ன விலை நிர்ணயம் செய்து இருக்கிறாய் என்று கேட்டார். நான் 40 ரூபாய் எனச் சொன்னேன், அப்போது கருணாநிதி என்னிடம், "நான் சொல்கிறேன், 30 ரூபாய்க்கு அதனைக் கொடு" என்றார். 300 கோடி இழப்பு எனக்கு பெரும் விஷயம் அல்ல, எல்லோருடைய வீட்டிலும் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தது தான், இன்று நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் குறைந்த விலைக்கு கிடைக்கக் காரணம்" எனத் தெரிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சி காலத்திலேயே நிதி நெருக்கடியை காரணம் காட்டி துவரம் பருப்பு விற்பனையை ரேசனில் நிறுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+