டெல்லி ஐடி அலுவலகம் தீ விபத்து! ஆவணங்களை அழிக்க முயற்சியா? காங். சந்தேகம் சரியா?
சென்னை: டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் தீ விபத்துக்கு உள்ளானது பற்றி எதிர்க்கட்சிகள் சில சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. அதற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ராதாகிருஷ்ணன்.
கடந்த இரண்டு நாள்கள் முன்பாக டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து நடந்தது. அப்போது அங்கே ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

சில ஆண்டுகள் முன்னதாக நார்த் ப்ளாக் கட்டடத்தில் இதைப்போன்று ஒரு தீ விபத்து நடந்தது. இப்போது மீண்டும் டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து நடந்துள்ளது.
ஆகவே, இந்தத் தீ விபத்து பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். ஏதேனும் ஆவணங்களை மறைப்பதற்காக இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், வருமானவரித்துறை அலுவலகம் இதற்கான விளக்கங்களை அளித்துள்ளது. 'எந்தவிதமான ஆவணங்களும் சேதமாகவில்லை. தரவுகள் அனைத்து பத்திரமாக உள்ளன' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருந்தாலும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரியும் போது இதைப்போன்ற தீ விபத்துகள் நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது. அதற்குள் உள்ள அரசியல் என்ன?
யாரையேனும் காப்பாற்றுவதற்காக இந்த மாதிரியான செயல்கள் அரங்கேறுகின்றனவா? இப்படிப் பல்வேறு சந்தேகங்களுக்குப் பதிலளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ராதாகிருஷ்ணன்.
அவர் தனது அனுபவத்தில், இதைப்போன்ற நிகழ்வுகளை நிறையச் சந்தித்துள்ளதாகச் சொல்கிறார். அத்துடன் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கூட ஆவணங்கள் கோப்புகள் மூலம் பாதுகாக்கப்படுவதற்குப் பின்னால் ஏதேனும் மறைமுக காரணங்கள் இருப்பதாகவே உளவுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் தகவல் தருகிறார்கள் என்றும் கூறுகிறார்.

இப்போது டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற தீ விபத்து பற்றிப் பேசியுள்ள ராதாகிருஷ்ணன், "வருமானவரித்துறை அலுவலகம் அல்லது உள்துறை அலுவலகம் எல்லாம் அவ்வளவு எளிதாகத் தீப் பிடித்துவிடாது. அந்தளவுக்குப் பாதுகாப்பு நவீன வசதிகள் எல்லாம் இன்றைக்கு வந்துவிட்டன.

அப்படி வைத்துப் பார்க்கும்போது, இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்கு உரியதாகத்தான் உள்ளது. எனக்கு உளவுத்துறை அதிகாரிகளுடன் பல ஆண்டுகளாகப் பத்திரிகை ரீதியிலான தொடர்புகள் உண்டு. அந்தப் பொது அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்கிறேன். இந்த விபத்து என்பது தற்செயலாகத் தோன்றவில்லை.

வருமானவரித்துறை அதிகாரிகளாகப் பலர் இருந்துள்ளனர். அவர்களில் பலரின் புகழ் வெளிச்சத்திற்கு வந்ததில்லை. இன்றைக்கு டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு முன்னாள் வருமானவரித்துறை அதிகாரிதான். அவரது மனைவி கூட வருமானவரித்துறை அதிகாரிதான். இப்படி பலரைப் பட்டியல் போட்டுச் சொல்லமுடியும்.
இந்தக் குறிப்பிட்ட வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒரு ஆவணம் உள்ளது என வைத்துக் கொள்வோம். அது இங்கே மட்டுமே இருக்காது. அலுவலக ரீதியாக அதன் நகல் அரசின் பல அமைச்சகத் துறைகளுக்குச் சென்றாக வேண்டும்.

ஆகவே, குறிப்பிட்ட டெல்லி அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டுவிட்டால், ஆவணங்களை முழுதாக அழித்துவிட முடியாது.
ஆனால், இப்படி விபத்து ஏன் நடக்கிறது என்றால் உயர்மட்ட அதிகாரத்தில் உள்ளவர்களின் அச்சத்தால் ஏற்படுகிறது. இப்படியான அச்சத்தை ஆட்சி மாற்றம் ஏற்படும் காலத்தில் மட்டுமே காண முடியும். அதற்கா அறிகுறிதான் டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் உண்டான தீ விபத்து.












Click it and Unblock the Notifications