அக்., 27ஆம் தேதி தவெக மாநாடு.. அடுத்த நாலே நாளில் தீபாவளி! என்னதான் நடக்கிறது? குழப்பத்தில் நண்பாஸ்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு வெறும் 4 நாட்களுக்கு முன்னர் மாநாடு நடக்கும் நிலையில், பாதுகாப்பு, தொண்டர்கள் வருவது, போதிய வாகனங்கள் கிடைப்பதில் சிக்கல், என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகின்றனர் தவெக தொண்டர்கள்..
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போயுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சில தலைமையிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது 'தீபாவளி" பண்டிகையை தான் கைகாட்டுகின்றனர். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை நிச்சயம் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு நான்கு நாட்கள் முன்னர் தான் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வாடிக்கையாளராகவோ அல்லது விற்பனையாளராகவோ நிச்சயம் கட்சியினர் இருப்பார்கள். இதனால் தீபாவளி பர்ச்சேஸை அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் மிகப்பிரமாண்டமான வணிக நிறுவனங்களும் சிறு சிறு வியாபாரிகளும் அதிக அளவில் கடை அமைப்பார்கள் என்பதால் மாநாட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பதா அல்லது தீபாவளி விற்பனைக்கு பாதுகாப்பு கொடுப்பதா என போலீசார் குழம்பி இருக்கின்றனர். தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களில் விற்பனை துரிதமாக நடைபெறும் நிலையில் அப்போது மாநாடு அறிவிக்கப்பட்டு இருப்பது விஜய் கட்சி நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான கார்களின் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பார்கள். அப்போது மாநாட்டுக்கு வரும் வாகனங்களும் சேரும்போது மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே மாநாடு தொடர்பாக காவல்துறையினர் கேள்விகளை கேட்டிருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமா? உரிய பாதுகாப்பு வழங்க முடியுமா? போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியுமா? என பல கேள்விகள் எழுந்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல் தீபாவளிக்கு மிகக் குறுகிய நாட்களுக்கு முன்னதாகவே மாநாட்டு தேதியை குறித்தது யார்? அதற்கு பின்னர் ஏதும் ஜாதகக் காரணங்கள் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எப்படியோ விஜய் மாநாடு தொடங்கியதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக குறிக்கப்பட்டு இருக்கும் மாநாட்டு தேதியும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications