100% ஓட்டுப்பதிவு.. முதல் தலைமுறை வாக்காளர்கள்.. ஆளுநர் ரவி தந்த திடீர் சர்ப்ரைஸ்.. பறந்த அட்வைஸ்
சென்னை: முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
விரைவில் தேர்தல் வரப்போகிறது.. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. மற்றொருபக்கம், தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்றுகூட நடந்துள்ளது.
வாக்குப்பதிவு: சென்னை, ரிப்பன் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடி வாரியாக வழங்கப்பட வேண்டிய பொருட்கள், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெற்றுக் கொள்ள வேண்டிய பொருட்கள் குறித்தும், வாக்குச்சாவடிக்குரிய பணியாளர்களின் நியமன ஆணைகளை வட்டாட்சியரிடமிருந்து பெற்றுக் கொள்ளுதல், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ளுதல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
முக்கியமாக, வாக்குப்பதிவு முந்தைய நாளன்று இரவு அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களின் வருகை, தேவையான வாக்குப்பதிவு பொருட்களின் இருப்பு, வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள், நுண் பார்வையாளர்கள் உள்ளிட்டோரின் வருகையை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
வாக்காளர்கள்: இந்நிலையில், முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: "தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் மாளிகையில் கடந்த11-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக வலியுறுத்தினார்.
அடையாள அட்டை: முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்யும் இந்த முயற்சியை ஓர் இயக்கமாக கருதி, வாக்களிப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பதை உறுதிப்படுத்தவும் உரிய கவனம் செலுத்துவதாக துணைவேந்தர்கள் உறுதியளித்தனர்.
இதற்காக என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களின் உதவியை நாடுவது குறித்தும், மாணவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க புதிய செயலியை உருவாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களை 100 சதவீதம் வாக்களிக்க வைக்கும் கல்லூரிகள், துறைகளை பாராட்டுவதற்கான திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அறிவுறுத்தல்: 100 சதவீத வாக்குப்பதிவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் துணைவேந்தர்கள், ஆளுநர் மாளிகையில் பாராட்டப்படுவார்கள். வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்க, பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சமூக வலைதளங்களின் பயன்பாடும், பொழுதுபோக்கு வீடியோ காட்சிகளும் இந்த விழிப்புணர்வு பணிக்கு பெரிதும் வலுசேர்க்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications