டாஸ்மாக்கில் இதெல்லாம் நடக்க போகிறதா.. குடிமகன்களின் பல நாள் கனவு சார்.. மிகப்பெரிய முடிவு
சென்னை: டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவோருக்கு விரைவில் பில் கிடைக்கும். யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அத்துடன் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகப்போகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக முதல்கட்டமாக சென்னை, கோவையில் இந்த திட்டம் அமலுக்கு வரப்போகிறது.
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 800 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன இவற்றின் மூலம் கடந்த ஆண்டு அரசுக்கு சுமார் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 123 கோடி ரூபாயும், ஒரு மாதத்திற்கு 3698 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் 50000 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க வரும் குடிமகன்கள் ஒவ்வொருவரும் வைக்கும் குற்றச்சாட்டு ஒன்றுதான்.. அதாவது அரசு நிர்ணயித்த விலையைவிட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது என்ற புகாரை தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு அவ்வப்போது கடும் நடவடிக்கை எடுத்த போதிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது நிறுத்தப்படவில்லையாம்.
தொடர்ந்து பல மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுகிறது என்றும், புல் பாட்டில் வாங்கினால் 40 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாகவும், ஆப் பாட்டில் என்றால் 20 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாகவும் குடிமகன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதேபோல் மதுபாட்டில்கள் போக்குவரத்தில் முறைகேடு, கடைகளில் இருப்பு பிரச்சினை உள்பட பல்வேறு புகார்கள் தினமும் எழுந்து வருகின்றன. எனவே இந்த துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணியினை தொடங்கி உள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வெளியேறி, மதுபிரியர்கள் கையில் பாட்டில்கள் கிடைக்கும் வரை அனைத்து பணிகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.. இந்த பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு தொடங்கியது. அதற்கான ஒப்பந்தம் ரூ.294 கோடி செலவில் மத்திய அரசின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறதாம். இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்து விட்டதாகவும் இதை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய டிஜிட்டல் மயம் அவசியம் என்பதை விருகிறது. அதன்படி தொழிற்சாலைகளுக்கு மது பாட்டில்கள் ஆர்டர்கள் கொடுப்பது, அங்கிருந்து சரக்குகளை வாகனத்தில் ஏற்றுவது, அதனை அரசு குடோனில் கொண்டு வந்து சேர்ப்பது, பின்னர் கடைகளுக்கு அனுப்புவது மற்றும் கடைகளில் இருந்து குடிமகன்களுக்கு வழங்குவது என அனைத்து பணிகளையும் டிஜிட்டல் மயமாக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். முறைகேடுகள் குறையும். எளிதாக கண்காணிக்க முடியும்.
அதுமட்டுமின்றி மது பாட்டில்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களும் ஜி.பி.எஸ். வசதி செய்யப்பட உள்ளதாம். அந்த வாகனம் செல்லும் வழித்தடம் மட்டுமின்றி, அந்த வாகனத்தில் என்னென்ன மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுமாம். இதனால் ஒரு கடையில் இருக்கும் மதுபாட்டில் இருப்புகளை கண்டறிய நேரடியாக செல்ல தேவையில்லை. எந்த கடையில் எவ்வளவு மதுபாட்டில்கள் இருக்கிறது என்பதை டிஜிட்டல் முறையில் எங்கிருந்து வேண்டுமானாலும் அதிகாரிகள் அறிந்து கொள்ளலாம். மேலும் அந்த கடைக்கு தேவையான பாட்டில்களை உடனடியாக அனுப்பவும் அதிகாரிகளால் முடியும்.
இந்த திட்டம் முதலில் அமலுக்கு வரப்போகிறது. அதன்பின்னர் ஒவ்வொரு பாட்டில்களிலும் இனி ஒரு கியூ-ஆர் கோடு கொண்டுவரப்பட உள்ளதாம். அதன் மூலம் கையடக்க கருவியில் ஸ்கேன் செய்து குடிமகன்களுக்கு உடனடியாக பில் வழங்குவார்களாம். அந்த பில்லில், விலை மட்டுமின்றி மது பாட்டில்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்குமாம். அத்துடன் இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் பில் போட்டு மட்டுமே விற்பனை செய்தாக வேண்டிய நிலை ஏற்படுமாம்.
அதேபோல் அனைத்து கடைகளிலும் கார்டு மற்றும் யூ.பி.ஐ. மூலம் பணம் பெறுவதற்கான சாதனம் வழங்கப்பட்டு உள்ளது. அவையும் முழு அளவில் இனி பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள். இதனிடையே டாஸ்மாக் நிறுவனத்தில் டிஜிட்டல் மயத்தின் இறுதி கட்டப்பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால். சோதனை அடிப்படையில் சென்னை மற்றும் கோவையில் அடுத்த மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வருமாம் அதன்பின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுமாம். இன்னும் 2 மாதங்களில் டிஜிட்டல் மயம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்துவிட வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications