இரவில் முதன் முறையாக நடத்தப்படும் ஃபார்முலா 4 ரேஸ்! சென்னையில் ரேஸ் எப்போ தெரியுமா? தமிழ்நாடு ஹேப்பி
சென்னை: சென்னையில் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.. இந்த பந்தயமானது, மிகுந்த எதிர்ப்பையும், அதேசமயம் எதிர்க்கட்சிகளின் அதிருப்தியையும் பெற்று வருகிறது.
சென்னையில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயத்தை, சென்னையில் கடந்த டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது.

கார் பந்தயம்: ஆனால், இந்த கார் பந்தயத்தை சென்னை நகருக்குள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது..., இது தொடர்பான மனுவில், "இந்த கார் ரேஸ் நடத்துவதால், தமிழக அரசுக்கு எந்த நன்மையும் கிடைக்காதபோது, எதற்காக 40 கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டும்? கார் ரேஸ் நடக்கும் பகுதியில் அரசு மருத்துவமனை இருப்பதால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.. போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படும்" என அந்த மனுவில் கூறப்பட்டது.
இதற்கு நடுவில், கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் புயல், வெள்ளம் காரணமாக, ஃபார்முலா 4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்படுவதாகவும், இதற்காக ராணுவம் மற்றும் கடற்படையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது.
அண்ணா சாலை: இப்படிப்பட்ட சூழலில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கும் என்று மறுபடியும் தகவல் வெளியானது.. தீவுத்திடல் முதல் பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக இந்த பந்தயம் நடப்பதால் இதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூடுதல் தகவல் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இதற்கு முதல்நபராக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.. பார்முலா 4 கார் பந்தயத்துக்கு ஸ்பான்சர்ஷிப் தருமாறு தொழிக் நிறுவனங்களை திமுக அரசு மிரட்டி வருவதாக, பகிரங்க குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
ஃபார்முலா கார்: அதுமட்டுமல்லாமல் 3 முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பால் சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நூற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள் கடுமையாக பாதிப்படைந்து தொழிற்துறை முடங்கியுள்ள நிலையில், விடியா திமுக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த ஹைகோர்ட் அனுமதி அளித்திருந்த நிலையில், ஏற்கனவே சொன்னபடியே, ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மையப்பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
தீவுத்திடல்: ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம், சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது... இதற்காகவே, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் சென்னையில் நடக்க போவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவு போட்டியாக சாலை வழியாக நடத்தப்படும் கார் பந்தயம் இதுவென்பதால், மிகப்பெரிய ஆர்வம் விளையாட்டு ஆர்வலர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்களாம்.
இரவு போட்டி: கடந்த டிசம்பர் மாதம் சென்னையில், ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இதற்காகவே, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சாலைகளை தமிழக அரசு மேம்படுத்தியதாக தகவல்கள் கசிந்திருந்தன.
அதுமட்டுமல்ல, இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணமாக பிரீமியம் ஸ்டாண்ட் பகுதிக்கு, முதல் நாள் டிக்கெட் கட்டணமாக ரூ.3999-ம், இரண்டாம் நாளுக்கான கட்டணமாக ரூ.6,999-ம், கிராண்ட் ஸ்டாண்ட் கட்டணமாக முதல் நாளுக்கு ரூ.1,999-ம் கடைசி நாளுக்கான கட்டணமாக ரூ.2,599, கோல்டன் லாஞ்ச் என்ற ஸ்டாண்டில் முதல் நாள் டிக்கெட் கட்டணமாக ரூ.7,999, இரண்டாம் நாள் டிக்கெட் கட்டணமாக ரூ-13,999 வசூலிக்கப்படுவதாக 10 நாட்களுக்கு முன்பு இணையத்தில் தகவல்கள் பரபரத்தன.
கார் பந்தயம்: எனினும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்தியாவில் ஐபிஎல் பாணியில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது... ஆகமொத்தம், ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் வலுத்து வரும்நிலையில், மறுபக்கம், தெற்காசியாவிலேயே முதன் முறையாக நடக்க போகும் இந்த இரவு நேர கார் பந்தய போட்டிகள் மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது












Click it and Unblock the Notifications